அரசுப் பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாம் என நடத்துநரிடம் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு மாவட்ட எஸ்.பி. மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில், இலவச டிக்கெட் வேண்டாம் என்று கூறி மூதாட்டி துளசியம்மாள் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. மதுக்கரை அதிமுக ஐ.டி. பிரிவினர் வேண்டுமென்றே மூதாட்டியை பேச வைத்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டதாக திமுக ஐ.டி. பிரிவினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், அரசு மீது அவதூறு பரப்பியதாகக் கூறி மூதாட்டி துளசியம்மாள் மற்றும் அதிமுகவினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மூதாட்டியின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன், மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக பரவும் தகவல் தவறானது என்றும், மூதாட்டி வழக்கில் சாட்சியமாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். மூதாட்டியை பிரச்னை செய்ய சொல்லி அனுப்பிய அதிமுக ஐ.டி. பிரிவை சேர்ந்த மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.