தமிழ்நாடு

கொடைக்கானலில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம்

கொடைக்கானலில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம்

webteam

கொடைக்கானலுக்கு வரும் இஸ்ரேல் நாட்டவர் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம் திட்டியது அம்பலமாகி உள்ளது.

இதனை அடுத்து கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் பாதுகாப்புக் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் நேரில் ஆய்வு நடத்தினார். ஐஎஸ் ஆதரவாளர்கள் தொடர்பான வழக்கு கேரளாவில் நடைபெற்றுவரும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், கொடைக்கானலில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டவர் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் திட்டப்பட்டது தெரியவந்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளில் இஸ்ரேல் நாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் சதவிகிதம் தான் அதிகம். இவர்கள் இங்குள்ள வட்டக்கானல் பகுதிகளில் தான் தங்குவர். இங்கு வந்து தங்கி வரும் இஸ்ரேலியர்களை தாக்குவதற்காக ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் உள்ள இவர்களது ஆதரவாளர்களை வைத்து கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தங்கி இருந்து வேவுகளை பார்த்து வந்துள்ளனர். வேவு பார்த்த ஐஎஸ் ஆதரவாளர்கள் கடந்த 2016-ல் பல்வேறு இடங்களில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐஎஸ் ஆதரவாளர்களை இந்திய தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானலுக்கு வரும் இஸ்ரேலியரை தாக்குதல் செய்ய திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனுடையை குற்றப் பத்திரிக்கை நேற்று கேரளாவில் உள்ள எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வுத் துறையினரால் தாக்கல் செய்யப்பட்டது.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடைக்கானலில் தங்கி இஸ்ரேல் நாட்டவரை தாக்குதல் நடத்த திட்டமிட்டது உறுதியானதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியின் பாதுகாப்புக் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். உலக தீவிரவாத அமைப்புகளும், நக்ஸல் மற்றும் மாவோயிஸ்ட்களும், கொலை மற்றும் கொள்ளைக் குற்றவாளிகளும் எளிதாக தங்கி வரும் இடமாக கொடைக்கானல் மலைப்பகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.