செந்தில் பாலாஜி  PT WEP
தமிழ்நாடு

ஓராண்டுக்கு மேலாக சிறை வாழ்க்கை.. மீண்டும் நெஞ்சுவலி.. ஜாமீன் பெறுகிறாரா செந்தில் பாலாஜி?

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யுவபுருஷ்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி நள்ளிரவில் கைதானார் செந்தில் பாலாஜி. அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர் கண்காணிப்புக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் மனுத்தாக்கல் செய்து வரும் நிலையில், ஜாமீன் தொடர்பான அவரது மனு தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும், நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டபடி வருகிறது.

கடைசியாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 48வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இப்படியாக இருக்க, நேற்று மதிய உணவு சாப்பிட்ட பிறகு அவருக்கு இதய பகுதியில் அசவுகரியமாக இருந்ததால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தொடர்ந்து, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜியின் வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அமலாக்கத்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மறுபக்கம் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்படும் செந்தில் பாலாஜி தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை இன்று நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கூறிய நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர்.

இதற்கிடையேதான், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இருப்பதால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Supreme Court - ED - Senthil Balaji

மறுபக்கம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்.