திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே மேலையூரில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஜெயலட்சுமி என்பவர் சொத்துக்காக உறவினர்களால் வீட்டில் சிறைவைக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இதனையடுத்து, விவகாரம் தொடர்பாக விசாரிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில், காவலர்கள் ராஜா மற்றும் ராஜேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஜெயம் என்கிற ஜெயலட்சுமி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதும் தெரியவந்தது. மூதாட்டி ஜெயலட்சுமிக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் பராமரிப்பின்றி இருந்து வந்துள்ளார். அவருக்கு 100 குழி நிலம் இருந்ததாகவும், அந்த நிலத்தை கணவர் இறப்பதற்கு முன்பே விற்றுவிட்டதாகவும் தெரியவந்தது. மேலும், ஜெயலட்சுமி தற்போது இருக்கும் 40 குழி வீட்டு மனையும் கோவில் நிலத்திற்கு சொந்தமானது.
வீடியோ வைரலானதை வைத்து விசாரிக்கும்போது, மனநலம் பாதிக்கப்பட்டு பராமரிப்பின்றி இருந்து வந்த மூதாட்டி, அவ்வப்போது சாலைகளில் சென்று விழுவதால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வெளியே செல்லும்போது விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் அவரது தங்கை மகன் சிவசுப்பிரமணியனும், மனைவியும் இணைந்து மூதாட்டியை பராமரித்து வருகின்றனர்.
மூதாட்டிக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகளை சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவியும் இணைந்தே செய்து வருகின்றனர். அதன்படி, சொத்துக்காக மூதாட்டி வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பொய்யானது என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட காவலர்கள், சிவசுப்பிரமணியனுக்கு மூதாட்டியை பராமரிக்க தகுந்த அறிவுறைகளை வழங்கிச் சென்றனர். காவலர்களின் இந்த நடவடிக்கைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.