மது ஒழிப்பு  முகநூல்
தமிழ்நாடு

‘மது ஒழிப்பு மாநாடு’ நடத்தும் விசிக... பூரண மதுவிலக்கு சாத்தியமா இல்லையா? சமூக ஆர்வலர் சொல்வதென்ன?

பூரண மதுவிலக்கு சாத்தியமா என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

உலகளவில் மதுப்பழக்கம் என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சந்தோஷத்திற்காக மது அருந்துவதில் தொடங்கும் மதுகுடிப்போரின் செயல், இறுதியில் மதுவுக்கு அடிமையாகும் நிலைக்கு அவர்களை தள்ளுகிறது. தீய பழக்கமொன்று சமூக பழக்கமாகும்போது, அது பாலினம் கடந்து, வயது கடந்து... பலரையும் பாதிக்கிறது. அந்தவகையில், இன்றைய தேதியில் வயதானவர்கள், இளைஞர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் என வயது வித்தியாசமின்றி, பாலின பாகுபாடுமின்றி பலரும் குடிக்கு அடிமையாகி இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

இதனால் ஏற்படும் சமூக, பொருளாதார, மருத்துவ, உணர்வுசார் பிரச்னைகள் என்னென்ன என சொல்லத்தொடங்கினால், முடிவில்லாமல் பலவற்றை கூறிக்கொண்டே போகலாம். குடியால் குடும்பத்தை இழந்தோரே இங்கே உண்டு. வாழ்ந்தோர் என ஒருவர் கிடையவே கிடையாது.

இதற்கிடையே ‘மது அருந்துவது முற்றிலும் தவறு’ என்ற கருத்தினை முன்வைப்பவர்களை, ‘பூமர்கள்’ என்றுகூறுவது அல்லது ‘Outdated-ஆ இருக்கீங்க; Social Drinking இந்தகாலத்துல சகஜம்’ என கூறுவோம் ஒருபுறம்! இப்படி உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ள மது பழக்கத்தால் குடும்பங்களும், ஒன்றும் அறியா குழந்தைகளும் பெரும் பாதிப்பினை அடைகிறார்கள் என்பது நிராகரிக்க முடியாத நிதர்சனம்..

‘மதுப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு’ ,

‘புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் ,உயிரை கொல்லும்’

- என்று சுவரொட்டிகளிலும், திரைப்படங்களிலும் வாசகங்களிலும் பார்த்திருப்போம். அவ்வளவு ஏன்... அந்த மதுபாட்டில், சிகரெட் பாக்கெட்களிலேயே இருக்கும். இப்படி இந்த வாசகங்கள் பல வருடங்களாக கூறப்பட்டுதான் வருகிறது. ஆனாலும் அது என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் கவனித்தால், ஒன்றும் இல்லைதான்!

‘நம்ம ஊரில் எப்போதான் மது ஒழிப்புக்கு ஒரு விடிவுகாலம் வரும்’ என ஏங்கும் குடும்பங்கள் ஏராளம்.

சரி, ‘பூரண மது ஒழிப்பு’ என்பது சாத்தியமான ஒன்றா...?

இக்கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில், மருத்துவத்துறையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நம்மிடையே பேசினார். அவர் தரப்பில் சில முக்கியமான விஷயங்களை நம்மிடம் அவர் முன்வைத்தார். அவற்றை இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..

குடி பழக்கம் என்பது வேறு..குடி நோய் என்பது வேறு..

“மதுப்பழக்கம் உடையவர்கள் அனைவரும் அதற்கு முற்றிலுமாக அடிமையாவது கிடையாது. ஒருவர் மதுவிற்கு அடிமையாவதற்கு, மரபியல் ரீதியான காரணங்கள் பல இருக்கின்றன.

குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதெப்படி?

குடிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஊடகங்கள், பண்பாடு, பாரம்பரியம் , உணவுக்கலச்சாரம் என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

மதுவின் பயன்பாடு என்பது மனிதகுலத்தில் பல ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒன்று. எல்லா பண்டைய நாகரிங்களிலும் மதுப்பழக்கம் என்பது இருந்துள்ளது. ஒவ்வொரு நாகரித்திலும், அதன் பெயரும் வடிவமும் மாறியுள்ளன.

பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமா?

மனித குல வரலாற்றில் பூரண மதுவிலக்கு என்பது இந்தியாவில் மட்டுமில்லை; உலகளவில் எந்த நாடுகளிலுமே சாத்தியமான ஒன்று கிடையாது என்பதே என் கருத்து.

அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இம்முயற்சி தோல்வியையே தழுவி இருக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் இருந்தாலும், வசதிப்படைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மது அருந்துவதற்கான சாத்தியக்கூறுகள் அங்கே இருக்கின்றன.

ஆகவே மதுப்பிரச்னையை நாம் சமூக, பொருளாதார, பண்பாடு, மருத்துவப் பிரச்னையாக பார்க்க வேண்டியது அவசியம்.

மதுவால் ஏற்படும் 4 உடனடி விளைவுகள்:

மது குடிப்போருக்கு, 4 வகையான விளைவுகள் உடனடியாக ஏற்படும்.

  • மன அமைதியை உண்டாக்குவது

  • போதையை ஏற்படுத்துவது

  • மயக்கத்தை ஏற்படுத்துவது

  • தூக்கத்தை உண்டாக்குவது

இந்த 4 விளைவுகளின் காரணமாக, பண்டைய காலங்களில் வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுதும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடக்கூடிய பாட்டாளி மக்கள் வலி நிவாரணியாக எடுத்துக்கொளக்கூடிய நிலை இருக்கிறது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிடலாமா என்றால், நிச்சயம் இல்லை. அவர்களை மதுவிலிருந்து உடலளவில் மீட்பது எவ்வளவு முக்கியமோ அதேயளவுக்கு அவர்களை அந்தளவுக்கு உடலுழைப்புக்கு தள்ளும் சமூக பிரச்னைகளிலும் நாம் அக்கறை காட்ட வேண்டும். அந்த வகையில்,

எப்படி மீட்பது?

  • குடிநோயிலிருந்து விடுபடுவதற்கு மறுவாழ்வு மையங்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கும். ஆகவே மறுவாழ்வு மையங்களை அதிகரிக்க வேண்டும்.

  • குடிநோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர்களை குடிக்கு அடிமையாக்கிய சமூக, பொருளாதார காரணங்கள் என்ன என்பதை கண்டறிந்து அதனை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உதாரணமாக கடுமையான உழைப்பிலிருந்து அவர்களை மீட்பது, வேலையின்மை, வறுமை போன்ற காரணங்களிலிருந்து அவர்களை மீட்பது போன்றவை அவசியம்.

  • பள்ளிப்பாடங்களிலின் வாயிலாக மாணவர்களுக்கு இதனை குறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டும்.

இதற்கெல்லாம் கடுமையான விழிப்புணர்வு பிரசாரம் என்பது அவசியமாகிறது.

மதுக்கடைகளை மூடினால், மது ஒழிப்பு சாத்தியமாகுமா?

அதேசமயம், மதுக்கடைகளை மூடிவிட்டால் மது இல்லாத சமுதாயத்தை படைத்துவிடலாம் என்பது சாத்தியமான ஒன்று கிடையாது.

மது கடைகளை மூடிவிட்டால், கள்ளச்சாராயம் வரும். கள்ளச்சாரயத்தை அருந்தி பலர் உயிரிழக்க நேரிடும். எப்பொழுதுமே பிரச்னையின் ஆணிவேரை சரிசெய்யாமல் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும், ஆபத்துதான்.

இதனையெல்லாம் கருத்தில்கொண்டு, குடிக்கு அடிமையானவர்களை ‘முழுமையாக’வும் ‘முறையாக’வும் மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகள், பன்முகத்தன்மை வாய்ந்ததாக அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்.

மதுவின் மூலம் லாபத்தை ஈட்டும் அரசு!

ஓர் அரசானது, மதுவிலிருந்து வரும் லாபத்தை மதுவிலக்கிற்கு அரசு பயன்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசை பொறுத்தவரை டார்கெட் வைத்து மதுவின் மூலம் எவ்வளவு லாபம் அடைகிறோம் என்றுதான் பார்க்கிறார்கள். அது மதுவிலக்கிற்கு பயன்படுத்தப்படுகிறதா என்றால், கேள்விக்குறிதான். எப்போதுமே ‘மதுவை வைத்து கொள்ளை லாபம் ஈட்டி, அதன் மூலம் வருமானம் ஈட்டிக்கொள்ளலாம் என அரசு நினைப்பது தவறு.

‘மது விலையை ஏற்றினால் மதுவை வாங்க மாட்டார்கள். குடிப்பதை விட்டு விடுவார்கள்’ என்று சிலர் சொல்கின்றனர். மதுவின் விலை ஏற்றப்பட்டால், பாட்டாளி மக்கள் மதுவிற்கு மாற்றாக கள்ளச்சாரயத்தை நோக்கி செல்வர் என்பதே உண்மை. இதுபோன்ற அரசின் செயலால் கள்ளச்சாரயங்களின் புழக்கம் அதிகமாகிறது என்பதுதான் நிதர்சனம். இதுபோன்ற தவறான முன்னெடுப்புகளால் ஏற்படும் பிரச்னை மிகப்பெரியது என்பதால் அரசு மது ஒழிப்பில் கவனத்தோடு செயல்பட வேண்டும்.

விஞ்ஞானப்பூர்வமாகத்தான் கையாளவேண்டுமே  தவிர...

மதுவிலையை ஏற்றினால், பணம்படைத்தவராக இருந்தால் விலையை குறித்து கவலை கொள்லாமல் அதை வாங்கிவிடுவார்கள். ஆனால், பணம் இல்லாதவனோ தனக்கு கிடைக்கும் 100, 200 ரூபாயையும் மதுவாங்குவதற்காகவே செலவழித்து, பின்னர் குடும்பத்திற்கென்று எதுவும் செய்யாமல், இறுதியில் குடும்பத்தில் மிஞ்சுவது சண்டை மட்டுமே.

எனவே, விஞ்ஞானப்பூர்வமாகதான் இப்பிரச்னையை கையாள வேண்டுமே தவிர உணர்ச்சிப்பூர்வமாக அணுகினால் சரியான தீர்வை எட்ட முடியாது.

மது

பூர்ண மதுவிலக்கு என்பது நீண்ட கால நிகழ்வு, சட்டென அதற்கான தீர்வை எட்டிவிட முடியாது. இந்த இலக்கை அடைய கடுமையான பிரசாரம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக மது அருந்துவதால் ஏற்படக்கூடிய சமூக, பொருளாதார, குடும்பம், மருத்துவம் சார்ந்த பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்து கடுமையான விழிப்புணர்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.. அதன்மூலம் நம்மால் நிச்சயம் மாற்றத்தை காண முடியும்.