“அதிமுகவைப் பொறுத்தவரை ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, லஞ்ச லாவண்யமுள்ள அரசை, மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு” என நேற்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பாஜகவை வரவேற்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த இபிஎஸ், “சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. அரசியல் சூழலுக்கு தக்கவாறுதான் கூட்டணிகளை அமைக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் சூழலில்தான் யார் தலைமையில் யார் கூட்டணி அமைக்கிறார்கள் என்பது தெரியவரும்” என தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்கள் இதே கேள்வியைக் கேட்டிருந்தால், “உறுதியாக சொல்கிறோம், இறுதியாக சொல்கிறோம் அதிமுக பாஜக கூட்டணி கிடையாது கிடையாது கிடையாது” என ஆணித்தரமாக சொல்லி இருப்பார். சூரிய சந்திரன் உள்ளவரை பாஜகவுடன் கூட்டணி கிடையாது” என சொல்லி வந்தவர் தற்போது, “எங்களது கட்சியின் கொள்கையின் அடிப்படையில் யார் யாரெல்லாம் விருப்பப்பட்டு வருகிறார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்துடைய கட்சிகள்தான்” என சொல்கிறார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததும், அதன்பின்னர் இருதரப்பினருக்கும் இடையில் நடந்த வார்த்தை மோதல்களும் பின்னர் கூட்டணி முறிந்ததும் தமிழ்நாடு முழுக்க தெரிந்த ஒன்று. இத்தனையும் தாண்டி, பாஜக உடனான கூட்டணியா என்றால் ஒத்த கருத்துடைய கட்சியினருடன் கூட்டணி அமைப்போம் என்று பட்டும்படாமலும் பதில் சொல்கிறார் என்றால் காரணம் என்ன? கட்சி தரப்பில் விசாரித்தோம்.
இந்த மனமாற்றத்திற்கு பலதரப்பட்ட காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள். முதலாவதாக, தொடர்ச்சியான தோல்வி என்பது ஒரு அவப்பெயரைக் கொடுக்கிறது. அடுத்து, தங்கமணி, வேலுமணி போன்ற கட்சியின் மிக முக்கிய தலைவர்கள் பாஜகவுடன் செல்ல வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். மூன்றாவது, ஓபிஎஸ், சசிகலா போன்றோரையெல்லாம் கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் கட்சிக்குள்ளிருந்து வருகிறது.
இதை அனைத்தையும் தாண்டி மிக முக்கியமான ஒன்று உள்ளது. அதிமுகவின், எடப்பாடி பழனிசாமியின் வியூக வகுப்பாளராக சுனில் கொனுகொலு செயல்பட்டு வந்தார். திமுகவின் வியூக வகுப்பாளராக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த சுனில் கொனுகொலிவை 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வியூக வகுப்பாளராக கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. இவர் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில்தான் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து பிரிந்தது.
அதாவது, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள், அதிமுக தனியாக நின்றால் கூட்டணிக்கு வரும் என்ற கணக்கில் அப்போது வியூகங்கள் வகுக்கப்பட்டது. ஆனால், திமுக கூட்டணி மிக உறுதியாக இருந்தது. இப்போதும் கூட எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணி உடையும் என்ற நம்பிக்கையெல்லாம் இல்லை. விஜய் விவகாரத்திலேயே திருமாவளவன், திமுக உடன்தான் கூட்டணி என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இதன்காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கே திமுக கூட்டணி உடையும் என்ற நம்பிக்கை எல்லாம் போய்விட்டது.
மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், ஒருபக்கம் திமுக கடுமையாக அதிமுகவை எதிர்த்து வருகிறது, மறுபக்கம் ஓபிஎஸ், சசிகலா கட்சிக்கு தரும் குடைச்சல்கள், சொந்தக் கட்சியினரின் அழுத்தம், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் வீட்டில் நடத்தப்பட்ட ரைடுகள் என ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இதுவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டால், திமுக இங்கு தரும் பிரச்சனைகளை மத்தியில் உள்ள அரசின் உதவியுடன் சமாளித்துவிடலாம். ஓபிஎஸ் சசிகலாவையும் சமாளித்துவிடலாம். சொந்த கட்சியினரின் தலைவலி இல்லை. பாஜக கூட்டணிக்கு வந்துவிட்டால், பாமக, தமாகா என அனைவரையும் கூட்டணிக்கு அழைத்து வந்துவிடலாம். எனவே எல்லா தலைவலிகளுக்கும் ஒரே மருந்து பாஜகவுடன் கூட்டணி.
இதில் ஒரே ஒரு கண்டீசன்தான். அண்ணாமலை தங்களை முன்னிலைப்படுத்தக் கூடாது. அதிமுக கூட்டணி என்பதைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும். சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிமுகவை, அதிமுக கூட்டணியை முன்னிலைப்படுத்தியே அவரது பேச்சு, செயல்பாடு, அறிக்கை என அனைத்தும் இருக்க வேண்டும். கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை என்றால் வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமன், தமிழிசை சௌந்தரராஜன் போன்றோர் முன்னிலையில்தான் நடக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனை ஒட்டிதான் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய மனவோட்டம் இருக்கின்றன என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், “பாஜகவுடன் கூட்டணி இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை., ஒட்டும் இல்லை உறவும் இல்லை” என தனது வழக்கமான ரைமிங்கில் பதிலளித்துள்ளார். இதையும் கட்சியினரிடம் கேட்டோம். “பார்க்கத்தானே போகிறீர்கள்.. காலம் பதில் சொல்லும், பாஜகவுடன்தான் கூட்டணி இருக்கும்” என்கின்றனர். பார்ப்போம்!