தீபாவளி pt web
தமிழ்நாடு

தமிழர் கலாசாரத்தில் தீபாவளி பண்டிகை இருக்கா.. இல்லையா? அறிஞர்கள் சொல்வதென்ன? - தொடரும் விவாதங்கள்!

“பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளி நாள் என்பது விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்குப் பார்ப்பனர் வழியாக தமிழ்நாட்டுக்கு வந்த திருவிழா ஆகும்” - தொ.பரமசிவன்

Angeshwar G

தீபாவளித் திருநாள் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு காரணங்கள் மற்றும் கதைகள் உள்ளன. சில இடங்களில் சில சமூகத்து மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் கொண்டாடததற்கும் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளிப் பண்டிகைக்கு ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது. சில மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை அறுவடைத் திருநாளாக, சில மாநிலங்களில் வனவாசம் முடிந்து ராமர், சீதை, லக்‌ஷ்மனன் ஆகியோர் அயோத்திக்கு திரும்பிய நாளாக, வர்த்தமான மகாவீரர் முக்தி அடைந்த நாளாக என் வேறு வேறு பெயர்களில் பல்வேறு விதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி

தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகை என்பது ஐப்பசி மாதத்தன்று அமாவாசை தினத்தின் போதும், சில ஆண்டுகளில் அமாவாசை தினத்தின் முன்பும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை தீபாவளி என்பது, நரகாசுரனை விஷ்னு பகவான் வதம் செய்த நாள். அதைக் கொண்டாடும் பொருட்டு மக்கள் வெடி வெடித்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க தீபாவளிப் பண்டிகை தமிழர் பண்டிகை இல்லை என்ற கேள்வியும் விவாதமும் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழ் ஆய்வாளர்கள், அறிஞர்கள் தொடர்ந்து தீபாவளிப் பண்டிகை குறித்தான விளக்கங்களை வைத்தவண்ணமே உள்ளனர்.

தொ.பரமசிவன் தீபாவளிப் பண்டிகை குறித்து கூறுகையில், “பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளி நாள் என்பது விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்குப் பார்ப்பனர் வழியாக தமிழ்நாட்டுக்கு வந்த திருவிழா ஆகும். வடநாட்டில் இது சமண சமயத்தினை சேர்ந்த திருநாள் ஆகின்றது. விசயநகர அரசு நாட்டார் பண்பாட்டோடு சமரசம் செய்துகொள்ள நேர்ந்த போது நவராத்திரித் (தசரா) திருவிழாவினைப் பெரிதுபடுத்தியது” என தெரிவித்துள்ளார். சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள் கட்டுரை (நீராட்டும் ஆராட்டும் - காலச்சுவடு பதிப்பகம்)

தீபாவளி குறித்து தெரிவித்துள்ள மயிலை சீனி வேங்கடசாமி, “தீபாவளி சமணர்களிடம் இருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்த போது அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்த சொற்பொழிவு விடியர்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியால் மக்கள் வீடுகளுக்கு செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிவிட்டனர். வர்த்தமான மகாவீரரும் தாம் அமர்ந்திருந்த இடைத்திலேயே வீடுபேறடைந்தார். பொழுது விடிந்து எல்லோரும் விழ்த்தெழுந்து பார்த்த போது மகாவீரர் வீடுபேறடைந்திருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர்.

அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களுடன் யோசனை செய்து, உலகத்திற்கு ஞானவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு, அவர் வீடுபெற்ற நாளில் வீடுகளில் விளக்குகளை ஏற்றிவைத்து விழா கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அதுமுதல் இந்த விழா தீபாவளி எனும் பெயரால் கொண்டாடப்படுகிறது. (தீபம் - விளக்கு. ஆவளி- வரிசை) மகாவீரர் விடியர்காலையில் வீடுபேறடைந்தபடியால், தீபாவளி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. நீராடியபின்னர் திருவிளக்கேற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ?

சமணசமயம் வீழ்ச்சியடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்துமதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள், தாம் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்கமுடியாத இந்துக்கள், இதைத் தாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், பொருத்தமற்ற புராணக் கதையை கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்தநாளை கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர்புரிவது பண்டைக் காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி, மறுநாள் சூரியன் புறப்பட்டபிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக்காலத்துப் போர்வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த வழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் வீடுபேறடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை” என தெரிவித்துள்ளார். கட்டுரை - இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் ( சமணமும் தமிழும் புத்தகத்தில்)

மக்களை பொறுத்தவரை பல்வேறு வகையான பண்டிகைகளை எங்கிருந்து வந்திருந்தாலும் அதனை தங்களுக்கானதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அது ஆங்கில புத்தாண்டாக இருந்தாலும் சரி, அட்சய திருதியை ஆக இருந்தாலும் சரி. எல்லாவற்றையும் அரவணைத்து காலத்திற்கு ஏற்ப மாறிக் கொள்கிறார்கள். அறிவு தளத்தில் நடைபெறும் விவாதங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்காலும். ஆனாலும், ஆண்டு முழுவதும் உழைக்கும் அவர்கள் பண்டிகைகள் காலங்களில் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறார்கள். பெரும்பாலும் பண்டிகைகளில் உணவு, புத்தாடை போன்றவை சிறப்பாக இருக்கும்.

ஆதரவுக் கருத்துக்கள் மாற்றுக் கருத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும் பெருவாரியான மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் மனிதர்களை சாதி, மதம் என பிரிக்காமல் மேலும் ஒற்றுமைப் பலப்படுத்தினால் அப்படியான பண்டிகைகள் நாள்தோறும் கொண்டாடப்பட வேண்டியவையே.