குற்றம்சாட்டியவர் புதியதலைமுறை
தமிழ்நாடு

இஸ்லாமியர் என்பதால் உணவு வழங்க மறுக்கப்பட்டதா? பாபநாசம் உணவக உரிமையாளர் சொல்வது என்ன?

பாபநாசத்தில் இருக்கும் உணவகத்திற்கு சென்ற ஒருவர், தான் இஸ்லாமியர் என்பதால் சாப்பாடு உணவக உரிமையாளர் கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

PT WEB

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள பாபநாசம் கோவில் எதிரில் அன்னபூரணி எனும் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, அந்த உணவகத்திற்கு சென்ற ஒருவர், தான் இஸ்லாமியர் என்பதால் சாப்பாடு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இந்தப்பதிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலா இப்படி நடக்கிறது. அப்படி நடந்தால் உடனே இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என பலரும் கருத்துக்களை கூறி வந்தனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துகளும் வெளியாகி வந்தது. என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.

Naffes Ahmed என்பவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “நான் குடும்பத்தோடு தென்காசி சென்றிருந்தேன். அப்போது பாபநாசம் கோவிலுக்கு சென்று திரும்பியபோது அங்கிருக்கும் ஒரு கடைக்கு சென்றேன். 8 முழு சாப்பாட்டை ஆர்டர் செய்து அதற்காக 800 ரூபாயை கொடுத்தேன். 20 நிமிடங்களுக்கு பிறகு பார்சல்களை வாங்கிச்செல்வதற்காக நான் எனது மனைவியை அழைத்தேன். அவர் பர்தா அணிந்திருந்ததை பார்த்த கடையின் உரிமையாளர் சாப்பாடு கொடுக்க மறுத்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். அந்த நேரத்தில் பார்சல் ரெடியாகத்தான் இருந்தது.

மற்றவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். வாக்குவாதம் செய்தபோதும், அவர் எங்களுக்கு சாப்பாடு கொடுக்காமல், பணத்தை திரும்ப கொடுத்துவிட்டார். எங்களுக்கு அப்போது வேறு எங்கும் சாப்பாடு கிடைக்கவில்லை. 3 மணி வரைக்கும் சுற்றி திரிந்து பிள்ளைகளுக்கு கேக்கை வாங்கி கொடுத்தேன். தமிழ்நாட்டில் இப்படி நடப்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று தான் இஸ்லாமியர் என்பதால் உணவக உரிமையாளர் சாப்பாடு கொடுக்க மறுத்தது போன்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், கடையின் உரிமையாளருக்கு தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர் நம்மிடம் கூறியதாவது, “எங்கள் கடையின் மீது குற்றம்சாட்டியவர்கள் கடந்த ஜனவரி 31ம் தேதி மதியம் 12.45 மணியளவில் வந்தார்கள். அப்போது 4 வேளையாட்களே இருந்தார்கள். முதலில் 7 சாப்பாடு கேட்டார்கள், பிறகு இன்னுமொன்று கேட்டார்கள். டோக்கன் கொடுத்துவிட்டபிறகுதான் சாப்பாடு குறைவாக இருப்பது தெரியவந்தது. அது ஏற்கனவே டோக்கன் வாங்கியவர்களுக்காக வைக்கப்பட்டிருந்தது. சாப்பாடு தீர்ந்ததால், புதிதாக வைக்கப்பட்டிருந்த சாதம் கொதித்துக்கொண்டிருந்தது. ஒரு 20 நிமிடத்தில் பார்சல் கொடுத்துவிடுகிறோம் என்று கூறினேன். ஆனால், அவர்கள் அவசரமாக வேண்டும் என்று கூறினர். சாதம் மட்டும்தான் இல்லை, கூட்டு பொறியல் எல்லாம் இருந்தது. சாப்பாடு தயாரானதும் கொடுத்துவிடுகிறோம் என்றோம். ஆனால், அவர்கள் முடியாது என்று சொன்னதால், சரி கொடுத்த காசை வாங்கிக்கொள்ளுங்கள், வேறு இடத்தில்கூட சாப்பாடு வாங்கிக்கொள்ளுங்கள் என்றேன்.

அவர்களும் டோக்கனை கொடுத்துவிட்டு, பணம் வாங்கிச்சென்றார்கள். இதற்கிடையே, நான் பாஜகவைச் சேர்ந்தவன் என்பதால், மதத்தை வைத்து சாப்பாடு கொடுக்க மறுத்ததாக அவர்கள் குற்றம்சாட்டியது தெரியவந்தது. அதுமாதிரி குறுகிய மனம்படைத்தவர்கள் அல்ல நாங்கள். 45 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறோம். இங்கு இஸ்லாமியர்கள் பலர் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இதற்கிடையே அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி பொய்யாக கூறியுள்ளனர். நாங்கள் மனசாட்சிப்படிதான் தொழில் செய்கிறோம். பர்தா போட்டுக்கொண்டு வந்ததால் சாப்பாடு மறுக்கப்பட்டது என்ற பொய்யான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.” என்று சிசிடிவி காட்சிகளை கொடுத்து விளக்கம் கொடுத்துள்ளார்.

உணவக உரிமையாளர்

இதுதொடர்பாக நமக்கு கிடைத்த சிசிடிவி காட்சியில், சாப்பாடு கேட்ட நபர், டோக்கனை வாங்கிய பிறகு ஐஸ் கிரீமை வாங்கிவிட்டு அதற்கும் பணம் கொடுக்கிறார். மேலும், நேரம் ஆகிறது, சாப்பாட்டை சீக்கிரம் கொடுக்க முடியுமா என்றும் சிரித்த முகத்துடன் கேட்டுள்ளார். சாப்பாடு தயாராக நேரம் ஆகும் என்று தெரிந்தபிறகு, கொடுத்த பணத்தை மீண்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும், இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த உணவக உரிமையாளர், “அவர்கள் சென்ற ஒருசில நிமிடங்களில் மற்றொரு இஸ்லாமிய பெண் வந்து சாப்பிட்டுச் சென்றார். இன்னும் சொல்ல வேண்டுமானால் எங்களது கடையில் இஸ்லாமியர்கள் இருவர் பணிபுரிகின்றனர்” என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் உணவகத்தின் மீது குற்றம் சாட்டிய நபரை சமூகவலைதளங்களில் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆதலால், குற்றம் சாட்டியவர்கள் தங்கள் தரப்பில் விளக்கம் கொடுக்க முன்வந்தால், அதையும் ஆராய்ந்து செய்தியாக பதிவிட தயாராக இருக்கிறோம்.