தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய தலைமுறை
தமிழ்நாடு

லண்டன் செல்லும் அண்ணாமலை... ஆகஸ்ட்டில் அனைவரின் பதவியும் காலி... பலே திட்டத்தின் விரிவான பின்னணி!

அரசியல் குறித்து படிக்க 3 மாதங்களுக்கு லண்டன் சென்றுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த இடைப்பட்ட காலத்துக்கான பாஜக பொறுப்புத் தலைவராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் என்ன? விரிவாகப் பார்ப்போம்...

இரா.செந்தில் கரிகாலன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியல் குறித்த மூன்று மாத சான்றிதழ் கோர்ஸ் படிக்க இன்று லண்டன் சென்றுள்ளார். அவர் லண்டனில் இருக்கும் மூன்று மாத காலம், தமிழக பாஜகவின் பொறுப்புத் தலைவராக யாராவது நியமிக்கப்படலாம் என முன்பு தகவல்கள் வெளியாகின.

ஆனால், அப்படி யாரும் தற்போது அறிவிக்கப்படவில்லை. அதற்குப் பின்னணியில் அண்ணாமலையின் பலே திட்டம் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். என்ன பின்னணி? விரிவாகப் பார்ப்போம்...

ஐபிஎஸ் டூ கட்சித் தலைவர்!

அண்ணாமலை

ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய அண்ணாமலை, அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, 2020 ஆகஸ்ட் 25-ம் தேதி பாஜகவில் சேர்ந்தார். கட்சியில் இணைந்தபோதே அவருக்கு துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது, பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய அமைச்சரான பிறகு, தமிழக பாஜகவின் தலைவராக 2021 ஜூலை 8-ம் தேதி அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

அண்ணாமலை

தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலை பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. திமுக, அதிமுக அல்லாது மூன்றாவது அணியாக தேர்தலை வெல்வது சவாலான காரியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால், கண்டிப்பாக குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடலாம் என உறுதியாக இருந்தார் அண்ணாமலை. தலைமைக்கும் சில வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் அவர் எதிர்பார்த்தப்படி வரவில்லை... அண்ணாமலையும் கோவையில் போட்டியிட்டுத் தோற்றுப் போனார்.

அதற்குப் பொறுப்பேற்று அப்போதே தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவெடுத்ததாகவும் ஆனால் மூத்த நிர்வாகிகள் அதைத் தடுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்துதான், லண்டனுக்கு கோர்ஸ் படிக்கச் செல்வதாக தகவல்கள் வெளியாகின.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் என்று சொல்லப்பட்டது. 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்ப உள்ளார்.

அண்ணாமலை

அவர் லண்டனில் இருக்கும் காலகட்டத்தில், கட்சிப் பணிகள் தொய்வடையாமல் இருக்க, வேறு சீனியர் தலைவர் ஒருவரை, பொறுப்புத் தலைவராக யாராவது நியமிக்கப்படலாம் என்கிற தகவல்களும் வெளியாகின. ஆனால், யாரையும் அப்படி நியமிக்கவில்லை பாஜக தலைமை. என்ன காரணம் என்று கட்சி வட்டாரத்தில் பேசினோம்...

``அண்ணன் அண்ணாமலைக்கு மட்டுமல்ல... தமிழக பாஜகவில் தற்போது பொறுப்பிலிருக்கும் அனைவரின் பதவியும் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு காலாவதியாகிறது. அதனால் புதிய நியமனங்கள் அனைத்துமே, நவம்பருக்கு பிறகுதான் இருக்கும்.

அண்ணன் லண்டனில் இருந்து வரும்வரை அனைவருமே வெறும் உறுப்பினர்களாக மட்டுமே இருப்பார்கள். கிளைத்தலைவர் தொடங்கி மாவட்டத் தலைவர் வரை தேர்தல் நடத்திதான் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அண்ணாமலை

பதவி அடிப்படையில் நான் பெரியவர், நீ பெரியவர் என எந்தப் பிரச்னைகளும் ஏற்படாது. தவிர, அண்ணன் இல்லாத காலகட்டத்தில் இடைக்காலத் தலைவர் உள்ளிட்ட தேவையும் எழவில்லை. இந்த காலகட்டத்தில்.

சுதந்திர தின விழாவில் பிரதமர் முன்வைத்த கோரிக்கையான, உறுப்பினர் சேர்க்கையை இலக்காக வைத்து செயல்பட இருக்கிறோம். தேசிய அளவில் பிரதமர் மோடியும் தமிழ்நாட்டில் ஹெச்.ராஜாவும் முதல் உறுப்பினர்களாக இணைய இருக்கிறார்கள். உறுப்பினர்கள் சேர்க்கைக்காக கிராமங்களை நோக்கிச் செல்லவிருக்கிறோம்’’ என்கிறார்கள்.