தமிழ்நாடு

ஆவின் பால் விற்பனை - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஆவின் பால் விற்பனை - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

webteam

ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நெகிழி தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் பி. டி. ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், பெரும்பாலான உணவுப் பொருட்கள் நெகிழி உறைகளில் தான் அடைக்கப்பட்டு, விற்கப்படுகின்றன என்றும், உடலுக்கு தீங்கு என தெரிந்தும், அதில் வரும் உணவுப்பொருட்களை உண்கிறோம் என்றும் கவலை தெரிவித்தனர்.

நெகிழி கவர்களில் பால் விற்கப்படுவதை ஏன் தடை செய்யக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமுல், நெஸ்லே ஆகியவை நிறுவனங்கள் டெட்ரா பேக்குகளில் பொருட்களை வழங்குவது போல, ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். அப்போது தமிழக அரசு தரப்பில், உடலுக்கு தீங்கு என்றால் தடை செய்ய தயாராக இருப்பதாகவும், அதுகுறித்து அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்கள் விற்பனையை அவ்வப்போது ஆய்வு செய்து தடுப்பதாவும், கடந்த 20 நாட்களில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 22,930 கடைகள் சோதனை செய்யப்பட்டு, அவற்றில் 8,550 கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை விற்பனை செய்ததும், பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டு, 514 கிலோ நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 28.83 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும், சுற்றுச்சூழல் கண்காட்சியை அடுத்த மாதம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதில் நீதிபதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் அதிரடி சோதனைகள் நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளதாக குறிப்பிட்டனர்.

இதையடுத்து, ஆவின் பாலை பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தண்ணீர் விநியோகிக்கும் வாட்டர் கேன்களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.