amman arjunan and eps pt
தமிழ்நாடு

"என்னது 2 பாஜக எம்.எல்.ஏ அதிமுகவில் இணைகிறார்களா?" - அதிமுக எம்.எல்.ஏ சொன்னது குறித்து இபிஎஸ் ஷாக்!

இன்றைய தினம் பாஜக எம்.எல்.ஏக்கள் இருவர் அதிமுகவில் இணைவார்கள் என்று அம்மன் அர்ஜுனன் பேட்டியளித்த நிலையில், அதுகுறித்த கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

யுவபுருஷ்

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பலரை பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக கடந்த சில தினங்களாக செய்தியாளர்களை சந்திக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் போன்றவர்கள், ’அடுத்தடுத்த நாட்களில் பல முக்கிய புள்ளிகள் பாஜகவின் இணைவார்கள். பல குண்டுகள் வெடிக்கும்’ என்று சூசகம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கோவை மண்டலத்தில் அண்ணாமலை முன்னிலையில், மாற்றுக்கட்சியினர் பாஜகவில் சேரும் நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைகிறார்கள் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. ஆனால், நிகழ்ச்சி ரத்தான நிலையில், தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை இது தொடர்பாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மன் அர்ஜுணன், பாஜக எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் இன்று அதிமுகவில் இணைவார்கள் என்று பரபரப்பாக பேசினார்.

இதுதொடர்பாக பேசிய அவர் "நேற்றைய தினம் பாஜகவினர் இல்லாத ஒன்றை பரப்பினார்கள். ஆனால், இப்போது நான் சொல்கிறேன், இன்று பிறபகல் 2.15 மணிக்கு பாஜகவைச் சேர்ந்த 2 எம்.எல். ஏ,க்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார்கள். அது கொங்கு மண்டலமாகவும் இருக்கலாம், தென் மண்டலமாகவும் இருக்கலாம். இதனை சிரிப்புக்காக சொல்லவில்லை.

எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரை கொடுத்து உழைத்து பாஜகவை வெற்றி பெற வைத்தோம், இளைஞர் பட்டாளம் அதிமுகவை நோக்கி வருவதை அவர்களால் ஏற்க முடியவில்லை. அதனால், பிள்ளை பிடிப்பவர்கள் போல செயல்படுகிறார்கள்.

இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம், மாகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை இணைத்தது போல் இங்கும் நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இது வட மாநிலம் அல்ல, தமிழ்நாடு. கோவையில் பாஜக வெற்றிபெற்றால், நான் அரசியலை விட்டே விலகுகிறேன். கோவை, அதிமுகவின் கோட்டை என்பதால் பாஜக வெற்றிபெற வாய்ப்பில்லை” என்று உறுதிபட பேசினார்.

இளைஞர் பட்டாளம் அதிமுகவை நோக்கி வருவதை அவர்களால் ஏற்க முடியவில்லை. அதனால், பிள்ளை பிடிப்பவர்கள் போல செயல்படுகிறார்கள்.

இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், “அப்படியா? நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது. வந்தால் சந்தோஷம்தான். அப்படி யாரும் இணைந்தால் சொல்லி அனுப்புகிறேன்” என்று தனது பாணியில் சிரித்த முகத்தோடு பதிலளித்தார்.

அதிமுக எம்.எல்.ஏ சொன்ன கருத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கே தெரியவில்லை என்று சொன்னது பேசு பொருளாகியுள்ளது. ஏனென்றால் ADMK செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் கூட அந்த செய்தியாளர் சந்திப்பில் உடன் இருந்தார்.