தமிழ்நாடு

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்

rajakannan

புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ஐராவதம் மகாதேவன், 2009ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஆதம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். 

1930ம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த மகாதேவன், திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும் இருந்த ஐராவதம் மகாதேவன், 1987 முதல் 1991 வரை தினமணி பத்திரிகையின் ஆசிரியாகவும் இருந்தார். முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த மகாதேவன், பின்னர் கல்வெட்டு எழுத்துக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.

சிந்துசமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் மகாதேவன். தமிழ் பிராமி கல்வெட்டுகளில் ஆராய்ச்சி செய்த மகாதேவன் வித்யாசாகர் கல்வி அறக்கட்டளையை நடத்தி வந்தார். இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

“ரிக் வேத வழியிலான சிந்து சமவெளியின் திராவிட தொடர்புக்கான ஆதாரம்” எனது தனது ஆய்வுக் கட்டுரையில் ஐராவதம் மகாதேவன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் முக்கியமானவை. அந்த ஆய்வுக் கட்டுரையில், “சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தென்னகம் நோக்கி இடம் பெயர்ந்ததால் தென்னிந்தியாவில் அவர்களின் குடியேற்றம் நடந்திருக்கலாம். இதன் காரணமாகவே சிந்து திராவிடத்தின் நீட்சி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திராவிட மொழிகளில் காணப்படுகிறது. 

இதற்குச் சான்றாக, சங்க இலக்கியப் பாடல்களில் பல்வேறு சொற்கள் உள்ளது. பாண்டிய குடிபெயர்களாகிய மாறன், செழியன், வழுதி, பாண்டியன் என்ற சொற்களின் மூலவடிவங்கள் சிந்துவெளி இலச்சினைகளில் ஒருங்கிணைந்த சொற்றொடர் தொடராக இடம்பெற்றுள்ளது. 

வடஇந்தியாவில் ஆரியர்களும், திராவிடர்களும் கலந்து இந்திய சமுதாயம் தோன்றிய பின்னரே ரிக் வேதம் இயற்றப்பட்டது. இதற்கான பல சான்றுகளை ரிக் வேதத்தில் கண்டுள்ளேன். சிந்துவெளி நாகரிகத்தின் பெயர்களும், பட்டங்களும் ரிக் வேதத்தில் மொழிபெயர்ப்புகளாகக் காணப்படுகிறது. குறிப்பாக பாண்டியர்களின் மூதாதையர்களின் பெயர்களும் சிந்து சமவெளியின் குறியீடுகள் குறிப்புணர்த்தும் சொற்களும் ஒத்துப்போகிறது. 

சிந்துச்சமவெளி குறியீடுகளுக்கும், பண்டைத்தமிழ் சொற்களுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்ககால தமிழ் சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துசமவெளிக் குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளது” என அவர் கூறியுள்ளார்.