தமிழ்நாடு

இந்தி தெரியாதா? லோன் கேட்டுசென்ற மருத்துவருக்கு நேர்ந்த அவமதிப்பு

இந்தி தெரியாதா? லோன் கேட்டுசென்ற மருத்துவருக்கு நேர்ந்த அவமதிப்பு

Sinekadhara

அரியலூர் மாவட்டத்தில் மொழி பிரச்னையைப் பேசி, லோன் தர மறுத்த வங்கி மேலாளர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஓய்வு பெற்ற மருத்துவர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து கடைசியாக அரியலூர்‌ மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பாலசுப்ர‌மணியன். ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனது இடத்தில் கட்டடம் கட்டு‌வதற்காக லோன் கேட்டு, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குச் சென்றுள்ளார். பல ஆண்டுகளாக அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நம்பிக்கையில் ‌சென்ற மருத்துவர் பாலசுப்ரமணியன்,‌ வடமாநிலத்தைச் சேர்ந்த வங்கிக்கிளை மேலாளர் விஷால் படேலை சந்தித்துள்ளார்.

அப்போது வங்கி அதியாரியோ, உங்களுக்கு இந்தி தெரியுமா என்று கேட்டுள்ளார். மருத்துவரோ தனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம்தான் தெரியும் என்று கூறியுள்ளார். ஆனால், மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, உரிய ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள், வருமான வரி செலுத்திய சான்றுகள் என எல்லாம் இருந்தும், எந்த ஆவணத்தையும் பார்க்காத வங்கி மேலாளர், லோன் கிடையாது என மறுத்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் பா‌லசுப்ரமணி‌யன்.

மேலும் இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மொழி பற்றி பேசி லோன் தர மறுத்ததால், மான நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.