தமிழ்நாடு

மதுரை பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவம் - விசாரணையில் வெளியான தகவல்

மதுரை பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவம் - விசாரணையில் வெளியான தகவல்

Sinekadhara

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. முன்விரோதம் காரணமாக மாணவிகள் மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை ஈ.வெ.ரா நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், மாப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருவேறு அரசு பள்ளி மாணவிகள் இரு குழுக்களாக மாறி மாறி தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக இருவேறு பள்ளி மாணவிகளிடம் இன்று மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு தலைமையிலான குழு விசாரணை மற்றும் கவுன்சிலிங் நடத்தியது.

மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பெரியார் பேருந்து நிலையம் சென்ற இருவேறு பள்ளி மாணவிகள் அங்கு ஓடிப்பிடித்து விளையாடியபோது, இருவேறு பள்ளி மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட முன்பகை காரணமாக சனிக்கிழமை இருவேறு பள்ளியைச் சேர்ந்த மாணவிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டு மாறி மாறி தாக்கிக்கொண்டதாகவும் மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் 5ஆம் தேதி தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் அதுவரை மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு, தேர்வின்போது மோதலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்களே மாணவிகளை பள்ளிக்கு அழைத்துவந்து, பின்னர் தேர்வு முடிந்தபின்பு வீட்டிற்கு அழைத்து செல்லவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.