கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் - விசாரணையில் தெரியவந்த தகவல்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் | போலி பில் மூலம் மெத்தனால் வாங்கியது அம்பலம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட விஷ சாராய உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட மாதேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே கள்ளக்குறிச்சியை போலவே விழுப்புரம் கச்சராபாளையத்திலும் விஷ சாராயம் அருந்தி மூவர் உயிரிழந்துள்ளனர். அவ்வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் கடந்த சில தினங்களில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் விஷ சாராயத்தை விற்பனை செய்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விற்பனை வழக்கில் கைதானவர்

இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இரண்டாம் தரகராக மெத்தனாலை சப்ளை செய்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை விசாரணை செய்ததில் மாதேஷ் என்பவர்தான் தங்களுக்கு மெத்தனால் சப்ளை செய்பவர் என்ற தகவலை தெரிவித்தனர். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மாதேஷிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணையில் தெரியவந்தவை:

தின்னர் என்ற பெயரில் போலி பில் மூலம் 1,000 லிட்டர் மெத்தனால் மாதேஷால் வாங்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் தொழிற்சாலைகளை கண்டறிந்து ஜிஎஸ்டிபி இல்லாமல் மெத்தனால் வாங்கியுள்ளார்.

ஆந்திரா மட்டுமன்றி மாதவரம் அருகேயுள்ள தொழிற்சாலையில் இருந்தும் காலாவதியான மெத்தனாலை 3 முறை வாங்கி உள்ளார் மாதேஷ்.

கள்ளச்சாராயம்

அதனை கள்வராயன் மலை அடிவாரத்தில் விற்பனை செய்தும் வந்துள்ளார் மாதேஷ். மேலும் மெத்தனாலில் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து சாராயமாக விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. மாதேஷிடமிருந்து மெத்தனாலை வாங்கிய சின்னதுரை 1 க்கு 1 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து விற்பனை செய்துள்ளார்.

சின்னத்துரையிமிருந்து மெத்தனாலை வாங்கிய கோவிந்தராஜ் 1க்கு 1 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து விற்பனை செய்துள்ளார். மேலும், சாராயத்தில் வீரியம் குறைவாக இருப்பதாக யாராவது கூறினால் தண்ணீரின் அளவை குறைத்து விற்பனை செய்த கொடூரமும் அரங்கேறியுள்ளது

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விற்பனை வழக்கில் கைதானவர்கள்

மேலும், இடைத்தரகர்களான சின்னதுரை, ஜோசப் ராஜா, மதன்குமார் ஆகியோருக்கு மாதேஷ் விற்பனை செய்துள்ள சூழலில், இந்த மெத்தனாலை கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜூக்கும், கச்சிராப்பாளையத்தை சேர்ந்த ராமருக்கு சின்னதுரை விற்றது தெரியவந்துள்ளது.

கச்சிராப்பாளையத்தில் அதை விற்ற ராமரும் போலீஸாரால் கைது செய்துள்ளனர். இந்த விஷ சாராயத்தை அருந்தியதால் அப்பகுதியை சேர்ந்த கண்ணன், வீராசாமி, வீரமுத்து ஆகிய மூவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருடன் ராமரும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் கச்சராப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து கச்சராப்பாளையம் போலீசாரிடமிருந்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட சூழலில், சிபிசிஐடியும் இதனை கொலை வழக்காக பதிவு செய்து ராமரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகக்கது.