விழுப்புரம் கே.ஆர்.பாளையம் சம்பவம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

விழுப்புரம் | “கே.ஆர்.பாளையம் கிணற்றில் இருந்தது மலம் அல்ல... தேனடை” - வட்டாட்சியர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கே.ஆர்.பாளையத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தநிலையில், அது மலம் அல்ல தேனடை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கே.ஆர்.பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அமைந்துள்ள திறந்தவெளி கிணற்றின் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு, அதை அங்குள்ள குடிநீர் தொட்டியில் நிரப்பி, அதன் மூலம் அப்பகுதி மக்கள் குடிநீர் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த திறந்தவெளி கிணற்றில் மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இது தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், “அந்தக் கிணற்றில் மர்ம நபர்கள் சிலர் மதுபோதையில் மலம் கழித்துள்ளதாக சந்தேகிக்கிறோம்” என கஞ்சனூர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், கிணற்றில் கலக்கப்பட்டது மலம் அல்ல தேனடை என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் யுவராஜ் தெரிவிக்கையில், “கிணற்றில் இருப்பது மலம்தானா அல்லது வேறு எதுவுமா என்று ஆய்வுசெய்ய ஒருவரை கிணற்றில் இறக்கினோம். அப்போது அது மலம் அல்ல தேனடை என்று தெரியவந்தது” என்றார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்மாவட்ட ஆட்சியர், மக்களின் பாதுகாப்பு கருதி கிணற்றை சுற்றி இரும்புக் கம்பிகளால் வேலி அமைக்க தற்போது உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஆட்சியர் பழனி தெரிவிக்கையில், “கிணற்று நீரை ஆய்வு செய்ததில் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும், இந்த கிணற்றை சுற்றி மக்களின் பாதுகாப்பு கருதி இரும்பு வேலி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம், புதுக்கோட்டையிலேயே குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக எழுந்த சந்தேகம் போன்ற தொடர் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. இதன் விளைவாக, விழுப்புரத்திலும் இதுபோல நிகழ்ந்திருக்க கூடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்திருந்தது. இந்நிலையில் கிணற்றில் இருந்தது தேனடைதான் என்று செய்தி வந்திருப்பது, அப்பகுதி மக்களுக்கு தற்போது மனநிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.