தமிழ்நாடு

விசாரணைக்குழு முன்பு ஆஜரான ஷர்மிகா - எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவு

விசாரணைக்குழு முன்பு ஆஜரான ஷர்மிகா - எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவு

webteam
"சித்த மருத்துவர் ஷர்மிகா பிப்ரவரி 10 ஆம் தேதி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும்" என இந்திய மருத்துவத்துறை இயக்குநர் கணேஷ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.  
சித்த மருத்துவர் ஷர்மிகா உடல் எடை குறைப்பு, குழந்தை பிறப்பு, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்டவை குறித்து சமூக வலைதளங்களில் பேசிய கருத்துகள் வைரலாகின. இந்த கருத்துகள் தொடர்பாக எழுந்த புகார்களின் பேரில் சித்த மருத்துவர் ஷர்மிகா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கடந்த 6 ஆம் தேதி தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி, மருத்துவர் ஷர்மிகா மற்றும் அவரது வழக்கறிஞர் 2 பேர் அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ இயக்குநரகத்தில் ஆஜராகினர்.
இந்த விசாரணை சித்த மருத்துவ மன்ற தாளாளர் கணேஷ், சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் கனகவல்லி, மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் மேனக்சா, மருந்து ஆய்வாளர் சுசி கண்ணம்மா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்திய மருத்துவர்களுக்கான ஒழுக்க நடைமுறைகள் 1982 க்கு உட்பட்டு மருத்துவர் ஷர்மிகா வெளியிட்ட கருத்துகள் இருக்கிறதா என்று விசாரணை நடைபெற்றது. 
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவத்துறை இயக்குநர் கணேஷ், "இந்த விசாரணையின்போது மருத்துவர் ஷர்மிகா மீது எழுப்பப்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்கு ஷர்மிகா எழுத்துப்பூர்வ பதில்களை வரும் 10ஆம் தேதி தர வேண்டும் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது" என்றார்.