வேதிப்பொறியாளர் சுபத்ரா pt web
தமிழ்நாடு

அதிர்ச்சியை ஏற்படுத்திய அம்மோனியா கசிவு.. அச்சத்தில் எண்ணூர் மக்கள் - ஆய்வில் வெளிவந்த தகவல்கள்

சென்னை எண்ணூர் பகுதி மக்கள் எண்ணெய் கழிவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்குள், அமோனியா வாயு கசிவால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

PT WEB, Angeshwar G

அதிர்ச்சியை ஏற்படுத்திய அம்மோனியா கசிவு

எண்ணூர் அருகே கோரமண்டல் தொழிற்சாலைக்காக கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டுவர கடலுக்கு அடியில் பதியப்பட்ட குழாயில் நள்ளிரவில் கசிவு ஏற்பட்டது. அதனால், சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில், கடும் நெடியுடன் கூடிய கண் எரிச்சல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய சமுதாய நலக்கூடம், தேவாலயங்களில் தஞ்சமடைந்தனர். 15க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதற்கிடையில் ரசாயன கசிவை கண்டித்து, தொழிற்சாலையை மூடக்கோரி எண்ணூர் விரைவு சாலையில் பல்வேறு இடங்களில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெளிநபர்கள் உள்ளே வந்துவிடாதபடி ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆய்வில் வெளிவந்த தகவல்கள்

ரசாயன கசிவு தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்துள்ள குழு தொழிற்சாலையில் ஆய்வு நடத்தியது. அதில், காற்றில் அமோனியா பாஸ்பேட் பொட்டாஸ் சல்பேட் கசிந்தது உறுதி செய்யப்பட்டது. ஆலை வாசலில் 400 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய, அமோனியாவின் அளவு 2ஆயிரத்து 90 மைக்ரோ கிராமாக உள்ளது. திரவ அமோனியா கொண்டுவர பயன்படுத்தப்படும் குழாய் பதிக்கப்பட்டுள்ள கடல் பகுதியில் 5 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய அமோனியாவின் அளவு 49 மைக்ரோகிராமாக உள்ளதையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. ஆலை பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

தொழிற்சாலைகளைக் கண்காணிக்க விரைவில் குழு

போர்க்கால அடிப்படையில் ரசாயனக் கழிவை சரிசெய்ய உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக கருத்து தெரிவித்த அவர், “எண்ணூர் பகுதியில் இருக்கும் Red category தொழிற்சாலைகள் எல்லாம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, எல்லா தொழிற்சாலைகளிலும் அதற்கான கட்டமைப்பு சரியாக இருக்கிறதா? இது போன்ற ஆபத்தான சூழல் ஏற்படுகிற போது அதனை தவிர்ப்பதற்கான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க விரைவில் ஒரு குழு அனுப்பி அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க ரசாயன வாயு கசிவு சரி செய்யப்பட்டதாக கோரமண்டல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. குழாயில் கசிவு இருந்ததை கண்டறிந்த உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரணைக்கு எடுத்த பசுமை தீர்ப்பாயம்

இதற்கிடையில், அமோனியா வாயு கசிவு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. வெளியான செய்திகள் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. நீதித்துறை உறுப்பினர் நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணா இந்த வழக்கு வரும் ஜனவரி 2ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை

ரசாயன வாயு கசிவு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வல்லுநர் சொல்வதென்ன?

தொழிற்சாலை இடைவிடாமல் தொடர்ந்து செயல்பட்டாலும், பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படாமல் இருந்தாலும் இதுபோன்ற வாயு கசிவு விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளதாக வேதிப்பொறியாளர் சுபத்ரா புதியதலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “உர ஆலையில் அம்மோனியா தான் முக்கியமான கருப்பொருள். இதனுடன் நைட்ரிக் ஆசிட் எனப்படும் இன்னொரு பொருளுடன் வினைபுரிய வைத்து அம்மோனியம் நைட்ரேட் உருவாக்குகிறார்கள். இதன் தேவை அதிகமாகும் போது ஆலை தொடர்ச்சியாக செயல்படும் போதோ அல்லது போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தாலோ இம்மாதிரியான விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

சமீபத்தில் லெபனானில் ஒரு விபத்து நடந்தது. அதுகூட இந்த அம்மோனியம் நைட்ரேட் தொடர்பானது தான். இது மிகத்தீவிரமான பிரச்சனையை உருவாக்கும். அங்கிருக்கும் மக்களுக்கு ஆபத்தான நேரங்களில் எவ்வாறு செயல்படுவது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.