தமிழ்நாடு

தருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்

தருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்

webteam

தருமபுரி அருகே பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். 

தருமபுரி அருகே மலைக்கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மலைக்கிராம மக்கள் இரண்டு நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் கோட்டப்பட்டி காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறியுள்ளனர். 

புகார் அளித்து ஒருவாரமாகியும் நடவடிக்கையில்லை, வன்கொடுமை என்று புகார் அளித்தும் வன்கொடுமை முயற்சி என வழக்குப்பதிவு செய்தது, குற்றவாளிகளை தேட மாணவியின் குடும்பத்தினரிடமே ரூ.6ஆயிரம் லஞ்சம் வாங்கியது, மாணவியை மருத்துவமனையில் சேர்க்காமல் காப்பகத்தில் கொண்டு போய் விட்டது, மாணவி அளித்த வாக்குமூலத்தை மறைத்தது என காவல்துறையினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கிராம மக்கள் முன்வைத்தனர். 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தருமபுரி ஆட்சியர் மலர்விழி, குற்றவாளிகள் 48 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ் கைதாகியுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை அரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி மேற்கொள்வார் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்ட மற்றொருவரான ரமேஷ், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.