தமிழ்நாடு

செம்பரம்பாக்கம்: மதுபோதையில் 8வது மாடியிலிருந்து தவறிவிழுந்த மாணவர் உயிரிழப்பு

செம்பரம்பாக்கம்: மதுபோதையில் 8வது மாடியிலிருந்து தவறிவிழுந்த மாணவர் உயிரிழப்பு

Sinekadhara

செம்பரம்பாக்கத்தில் மது போதையில் கல்லூரி மாணவர் 8வது மாடியில் இருந்து தவறிவிழும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் நவீன்குமார்(21). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.டெக் பயோமெடிக்கல் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் செம்பரம்பாக்கத்தில் உள்ள 18 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியுள்ளார். கடந்த 16ஆம் தேதி இரவு பக்கத்து அறையில் தங்கியிருந்த நண்பரின் பிறந்தநாள் என்பதால் அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி விட்டு நண்பர்கள் அனைவரும் மது போதையில் இருந்துள்ளனர்.  அவர்கள் அதிக போதையில் இருந்ததாலும் இந்த அறையில் அதிக நண்பர்கள் இருந்ததால் இங்கு படுக்கவேண்டாம் என தனது அறைக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

ஆனால் நவீன்குமார் தங்கியுள்ள அறையின் சாவி மற்றொரு நண்பரிடம் இருந்ததாலும், எட்டாவது மாடியில் உள்ள பிறந்தநாள் கொண்டாடப்பட்ட அறையின் பின்வழியாக உள்ள பைப்பை பிடித்துகொண்டு சென்றால் தான் தங்கியுள்ள அறையின் பின்பக்கம் சென்று விடலாம் என்பதாலும் போதையில் இருந்த நவீன்குமார் வழக்கம்போல் அறையின் பின்புறம் வழியாக செல்லும்போது நிலைதடுமாறி எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி தற்போது அந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் மதுபோதையில் வரும் மாணவர் நவீன் அங்கிருந்த குதிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அருகே இருந்த நண்பர் அவரை அழைத்து சென்றார். பின்பு மீண்டும் வந்து சுவர் மீது ஏறி தாவும்போது கீழே விழுவது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.