திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியை கேரளாவை சேர்ந்த யாசிர் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த செவ்வாய் அன்று இரவு இந்த பேக்கரிக்கு மது போதையில் வந்த அருண்பாண்டியன் என்பவர், அங்கு அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.
அப்போது மது போதை தலைக்கு ஏறியதால், அருண் பாண்டியன் டேபிளிலேயே படுத்தும் உறங்கியுள்ளார். அவரை கடை மேலாளர் எழுப்பிதால் ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் பேக்கரியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு ஊழியர்களையும் தாக்கியுள்ளார். இதில் பஷீர் என்ற ஊழியரின் தலையில் காயம் ஏற்படவே, அவரை மீட்ட சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் காவல்துறையினர் அருண்பாண்டியனிடம் விசாரணை நடத்தியபோது, பேக்கரியில் சிக்கன் ரைஸ் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறி காவல்துறையினரிடமே ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது அருண் பாண்டியன் அதிக மது போதையில் இருந்ததால் மறுநாள் காலை காவல் நிலையம் வருமாறு கூறி அவரை காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில், திடீரென தலைமறைவானார் அருண் பாண்டியன். இது தொடர்பாக வேடசந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், கரூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த அருண்பாண்டியனை சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.