திருநங்கை சிந்து pt
தமிழ்நாடு

திண்டுக்கல் | தெற்கு ரயில்வேயின் ‘முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர்’ திருநங்கை சிந்து!

தமிழகத்தில் முதல்முறையாக திண்டுக்கல்லில் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக திருநங்கை ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

முதன்மை செய்தியாளர்: எம்.வீரமணிகண்டன்

அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம்பதித்த நிலையிலும் ஆணுக்கு நிகராக சமத்துவம் கிடைப்பதற்கு பெண்கள் பலநேரம் போராடத்தான் வேண்டி இருக்கிறது. அதேபோலதான் தற்போது திருநங்கைகளும் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர்.

பல திருநங்கைகள் தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்திலேயே இருக்கின்றனர். இந்தக் கேள்வியை தகர்த்து ஒருசில திருநங்கைகள் திறமையால் சாதித்து வருகின்றனர். சுயதொழில் மட்டுமின்றி மத்திய, மாநில அரசு பணிகளிலும் திருநங்கைகள் அசத்தி வருகின்றனர்.

திருநங்கை சிந்து

அந்த வகையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து கடந்த 7ம் தேதி பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். மக்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து திருநங்கை சிந்து நமக்கு அளித்த பேட்டியில், “எனது சொந்த ஊர் நாகர்கோவில். நான் பி.லிட் தமிழ் இலக்கியம் படித்துள்ளேன். 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்தேன் நான். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்தேன். ரயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினேன்.

திருநங்கை சிந்து

இதற்கிடையே சிறு விபத்தில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மின்சார பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டேன். தற்போது டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்து பதவி ஏற்றுள்ளேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. ‘திருநங்கையாக பிறந்துவிட்டோம், என்ன செய்வது’ என்று நான் சோர்ந்து போய்விடவில்லை.

கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங்கைகள் முன்னேற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.