காவல்நிலையங்களில் விசாரணைக் கைதிகள் உயிரிழக்கும் நிகழ்வு தனது மகனோடு முடியட்டும் என சென்னை கொடுங்கையூரில் காவல்நிலையத்தில் உயிரிழந்த ராஜசேகரின் தாயார் கண்ணீர் மல்க தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற அப்பு நேற்று திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த போலீசார் ராஜசேகரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அங்கு கூறியுள்ளனர். இதையடுத்து ராஜசேகரை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து விசாரணை கைதி ராஜசேகர், சந்தேக மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். யார்- யார் ராஜசேகரிடம் விசாரணை நடத்தியது, எப்போது அழைத்து வரப்பட்டார், எங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ராஜசேகரின் தாயார் பேட்டியள்ளித்துள்ளார்.
அவர் பேசுகையில், “கொடுங்கையூர் காவல் நிலையம், சென்னை காவலர்களால் தனக்கு ஆபத்து இருப்பதாக மகன் தெரிவித்ததாக தாயார் தகவல் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தாயார் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் விசாரணைக்கைதிகள் உயிரிழக்கும் நிகழ்வு தனது மகனோடு முடியட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.