தமிழ்நாடு

கார் வாங்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: சினிமா பாணியில் மோசடி

கார் வாங்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: சினிமா பாணியில் மோசடி

webteam

'ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்' என்பது சதுரங்க வேட்டை படத்தில் நாயகன் பேசும் வசனம். அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சையத் கபீர் என்பவர் தனது புதிய இனோவா காரை 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக OLX இணையதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார்.

 கார் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்த வேலூர் திருப்பத்தூரைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் நவாஸ் அகமது அந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர் கடந்த 12ம் தேதி அதன் உரிமையாளராக பதிவிடப்பட்டிருந்த சையத் கபீர் என்பரை செல்போனில் அழைத்து பேசியுள் ளார். 

தான் சென்னை துறைமுகத்தில் பணிபுரிவதாகவும், இறக்குமதி செய்யும் போது சிறிய அளவில் சேதமடையும் கார்களை விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக சையத் கபீர் கூறினார். தொடர்ந்து கார் ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய நிலையில், இதனை நம்பிய நவாஸ் அகமது முன்பணமாக 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வங்கி மூலம் அவருக்கு அனுப்பியதாக தெரிகிறது. 

பின்னர் கடந்த 26ம் தேதி காரை வாங்குவதற்காக சென்னை வந்த நவாஸை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் சையத் கபீர் சந்தித்து காரையும் காட்டியுள்ளார். கார் வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, சுமார் ஒன்றரை லட்சம் பணத்தை சையத் கபீர் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. உறவினருக்கு உடல்நிலை சரியில்லை எனவும், காரில் உள்ள சிறிய பழுதை நீக்கி தருவதாக வும் கூறி காரில் மீண்டும் சென்றுள்ளார் சையத் கபீர். 

சுமார் ஓரு மணி நேரம் அங்கேயே காத்திருந்த நவாஸ் சந்தேகப்பட்டு செல்போனில் அழைத்தபோது சையத் கபீரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நவாஸ் பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை போன்று வேறு யாரும் ஏமாற வேண்டாம் என்று வேதனையுடன் கூறுகிறார் பணத்தை பறிக்கொடுத்த நவாஸ் அகமது.

முதற்கட்ட விசாரணையில், சையத் கபீர் போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. எந்த விதத்திலும் சந்தே கம் வரக்கூடாது என நண்பர் போல் பழகி, நம்ப வைத்து ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் சந்தித்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகள் கொண்டு, மோசடி செய்த சையத் கபீரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.