தமிழ்நாடு

நேபாளத்தில் சர்வதேச சிலம்பம் போட்டி: பதக்கம் வென்று அசத்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

நேபாளத்தில் சர்வதேச சிலம்பம் போட்டி: பதக்கம் வென்று அசத்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

kaleelrahman

நேபாள நாட்டில் நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில் 9 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய சிலம்பாட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த தீபம் அறக்கட்டளை நடத்தும் சிலம்பம் பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவர்கள் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும், சர்வதேச அளவியான போட்டிகளிலும் கலந்து கொண்டு தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று வருகின்றனர்.

உலக சாதனை புத்தகத்திலும் தொடர்ந்து இடம் பெற்று வரும் இவர்கள், கடந்த மார்ச் மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் வென்று அசத்திய இந்த மாணவர்கள், நேபாள நாட்டில் நடைபெறும் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகளில் விளையாட தேர்ச்சி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 முதல் நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகளில் மொத்தம் நான்கு நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியா சார்பாக தீபம் அறக்கட்டளையைச் சேர்ந்த 12 மாணவர்கள் பங்கேற்றனர்.

இறுதிப் போட்டியில் 9 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்களை வென்று அசத்திய தீபம் அறக்கட்டளையைச் சேர்ந்த மாணவர்கள், பயிற்சியாளர் ஈஸ்வரன் தலைமையில் சொந்த ஊர் திரும்பினர். அப்போது அவர்களுக்கு தேனி அரண்மனைபுதூர் விலக்கிலிருந்து கொடுவிலார்பட்டி வரை ஊர் மக்கள் திரண்டு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.