கக்கூஸ் ஆவணப்பட இயக்குநரும், சமூக செயல்பாட்டாளருமான திவ்யபாரதி மீதான புகாரை விசாரிக்கா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
ஒத்தக்கடை காவல்நிலையத்தில் வழக்கறிஞர் பாஸ்கர் என்பவர், கக்கூஸ் அவணப்படம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை இழிவுப்படுத்தும் நோக்கோடும், சாதி கலவரத்தை தூண்டும் விதமாக இருப்பதாக புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் திவ்யபாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை எதிர்த்து திவ்யபாரதி மதுரை கிளையில் வழக்குத்தொடர்ந்துள்ளார். அதில், கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் நலனுக்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலுமே தன் குறும்படம் அமைந்துள்ளதாக திவ்யபாரதி குறிப்பிட்டுள்ளார். அதனால், ஒத்தக்கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என கோரியிருந்தார். நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், சாதி மோதலை தூண்டும் வகையில் ஆவணப்படத்தில் எந்த பதிவும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து புகார் மீது ஒத்தக்கடை காவல்துறையினர் விசாரணை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.