Evidence kathir pt desk
தமிழ்நாடு

“தமிழக அரசு அலட்சியம் காட்டினால் ஆணவப் படுகொலைகள் அதிகரிக்கும் ” - எவிடென்ஸ் கதிர், கௌசல்யா பேட்டி

“அரசியல் வழக்குகளில் காட்டும் ஆர்வத்தை தமிழக அரசு ஆணவக் கொலை வழக்குகளிலும் காட்டாமல், கவனம் செலுத்தாமல் இருப்பது கவலை அளிக்கிறது, ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை தமிழக அரசு நிறவேற்ற வேண்டும்” என மதுரையில் எவிடென்ஸ் கதிர் தெரிவித்தார்.

Kaleel Rahman, webteam

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள எவிடன்ஸ் அலுவலகத்தில் எவிடன்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் கதிர் மற்றும் உடுமலைப்பேட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

செய்தியாளர்களிடம் எவிடன்ஸ் கதிர் பேசியபோது, “2013 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் பட்டியலின இளைஞர் சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கப்பட்டது, குற்றவாளிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கின் முதல் குற்றவாளி விடுவிக்கப்பட்டார்

Kausalya

இந்த வழக்கில் 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் சங்கரின் மனைவி கௌசல்யா சார்பிலும் மேல்முறையீடு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணவப் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளியை விடுவித்தபோது கௌசல்யாவை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த வழக்கில் தமிழக அரசு தலையிட்டு உரிய நீதியை பெற்றுதரும் என தெரிவித்தார்.

இந்த வழக்கை விரைவாக முடிக்கக் கோரி தமிழக அரசிடம் பலமுறை மனு அளித்துள்ளோம், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், விசாரணை தாமதமாகிறது. இதுவரை 6 வழக்குகளில் தான் செசன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்துள்ளது. 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் இதுவரை விசாரணைக்கு வராமல் கால தாமதமாகிறது. இதனை மாநில அரசு அழுத்தம் கொடுத்தால் ஒரே நாளில் வழக்கிற்கு எடுக்கலாம் ஆனால், இதுவரை இதனை செய்யவில்லை.

கடந்த 25 ஆண்டில் ஆணவப் படுகொலை வழக்கில் இந்த ஒரு வழக்கு மட்டுமே உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றும் தாமதமடைகிறது. ஆணவப் படுகொலை தடுப்பு தனி சட்டம் இயற்ற நீதிமன்றம் வழிகாட்டுதல்களுடன் உத்தரவிட்ட நிலையிலும், இதுவரை தனிச்சட்டம் இயற்றப்படாமல் உள்ளது. ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் வரும் என 2010-ல் சொல்லப்பட்டது, எல்.முருகனும் விரைவில் வரும் என்றார்.

gokulraj murder case

ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டம் குறித்து எங்கள் சார்பில் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். ஆணவப் படுகொலை தனிச்சட்டம் குறித்து பாஜக இதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை, பாஜக ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் குறித்து கண்டு கொள்வதில்லை, சாதிய கட்டுமானம் உடைந்து விடும் என்ற அச்சத்தால் பாஜக இதனை இயற்றவில்லை. தமிழக அரசு இந்த ஆணவப் படுகொலை தனிச்சட்டத்தை இயற்றினால் அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக இருக்கும்.

தமிழகத்தில் 15 மாதத்தில் 15 ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளது. சராசரியாக மாதத்திற்கு 2 ஆணவப் படுகொலைகள் நடைபெற்று வருகிறது. 2016 - 2020 வரை 4 ஆணவப் படுகொலை என ஆர்டிஐ தகவல் கிடைத்துள்ளது. சாதிய மறுப்பு திருமணங்கள் குறித்து விசாரணை அளிக்க தனிப்பிரிவு இல்லை. தமிழகத்தில் எங்கும் இல்லை. ஆணவப் படுகொலையை கருணைக் கொலை என அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞரை வைத்து இந்த வழக்கை நடத்தினார்கள். அரசியல் வழக்கில் காட்டும் ஆர்வத்தை இந்த வழக்கில் காட்டவில்லை" என்று தெரிவித்தார்.

ஆணவப் படுகொலை

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கௌசல்யா (ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி)..

“தீர்ப்பு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் வழக்கு இதுவரை நடைமுறைக்கு வராமல் கிடப்பில் போடுவது மனதை பாதிக்கிறது. ’எங்கள் அரசு வந்தால் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்’ என ஸ்டாலின் கூறினார். ஆனால், இப்போது இந்த வழக்கில் ஈடுபாடோ முனைப்போ இல்லை, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். நீதி கிடைத்தால் தான் ஆறுதலாக இருக்கும், அரசு இந்த வழக்கில் கவனம் செலுத்தாமல் இருப்பது மன வேதனையை தருகிறது, இதற்கு தீர்வு கிடைத்தால் தான் ஆணவப் படுகொலைகள் தடுக்கப்படும்.

இந்த வழக்கை தமிழக அரசு விசாரணை நடத்த இன்னும் தாமதப் படுத்தினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதுபோன்று திமுக அரசு அமைதி காத்தால் சாதிய அரசியல் வாக்குகளுக்கு அஞ்சுகிறது என அர்த்தம். இது போன்ற அலட்சியம் காட்டினால் உடுமலை சங்கர் போன்ற ஆணவப் படுகொலைகள் அதிகரிக்கும் நிலை உருவாகும். அருகில் இருந்த சாட்சியாக நான் இருக்கிறேன் ஆனால் முதல் குற்றவாளி விடுவிக்கப்பட்டார். இதற்கு பின்னால் சாதிய அமைப்புகள் உள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளி விடுவிக்கப்பட்டபோது அதனை கௌரவமாக பார்த்தார்கள்" என்றார்.