காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியில் பாறைகள் சரிந்து பெரும் விபத்து நேரிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் தொழிலாளர்கள் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல்போன 8 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
மதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில், மண் மற்றும் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. மலையில் இருந்து சரிந்துவந்த கற்குவியல்கள், அங்கிருந்த பொக்லைன் இயந்திரம், கனரக லாரி என 10க்கும் மேற்பட்ட வாகனங்களை புரட்டிப் போட்டது. அப்போது அங்கு மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வருவாய், தீயணைப்பு என பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மீட்புக்குழுவுடன் விரைந்தனர். எனினும், மணிகண்டன் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சோனாஹன்சாரி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல்போன 8 பேரை தேடும் பணி, இன்று காலை 8 மணியளவில் மீண்டும் தொடங்க உள்ளது. இதனிடையே, விபத்து நேர்ந்த இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.