மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சி மன்றத் தலைவரான பட்டியலின இளம் பெண்ணிடம், நாற்காலி வாங்குவது பற்றி இழிவாக பேசிய ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர்.
மன்னம்பந்தல் ஊராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்ட 23 வயதான பிரியா பெரியசாமி என்ற இளம்பெண் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார். தொடர்ந்து திமுகவில் இணைந்தார். இந்நிலையில் ஊராட்சி மன்றத் அலுவலகத்துக்கு தளவாட பொருட்கள் வாங்கும்போது ஊராட்சி மன்றத் தலைவருக்கு சுழல் நாற்காலி வாங்கியதற்கு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமலா ராஜகோபால் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
“பட்டியலின பெண்ணுக்கு சுழல் நாற்காலி ஒரு கேடா” என்று ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் விமர்சித்ததாகவும் பிரியா பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஊராட்சி வளர்ச்சி திட்டங்களுக்கு உண்டான நிதியை பெறுவதற்கு துணைத் தலைவர் கையெழுத்திட மறுப்பதாகவும் பிரியா பெரியசாமி குற்றம் சாட்டி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், தகாத வார்த்தைகளால் பேசிய, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.