fisher boating PT
தமிழ்நாடு

ஆழ்கடல் செல்லும் மீனவர்கள் படகுகளில் டிரான்ஸ்பான்டர் பொருத்தும் பணிகள் தீவிரம்

மீன் பிடி தடைக்காலம் முடியும் தருவாயில் மீனவர்கள் தங்கள் படகுகளில் டிரான்ஸ்பாண்டர் பொருத்தி வருகிறார்கள். இந்த கருவி மூலம் மீனவர்களின் நிலை குறித்து கரையில் இருப்பவர்கள் தகவல் தெரிந்துக்கொள்ளலாம்

Jayashree A, PT WEB

ஆழ்கடல் செல்லும் படகுகளில் இஸ்ரோ தொழில்நுட்பத்தில் டிரான்ஸ்பான்டர் என்ற புதிய கருவி பொருத்தும் பணி தொடங்கியது.

தடைகாலம் முடிந்து தயாராகும் ஆழ்கடல் மீனவர்கள்

வங்கக் கடலில் மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 தொடங்கி ஜூன் 15 வரை 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அப்படி இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.

இன்னும் இரண்டு நாட்களில் தடைகாலம் முடிவு பெற உள்ள நிலையில் கடலூர் மாவட்டச் சேர்ந்த ஆழ் கடல் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளை தயார் செய்யும் பணியில் தீவிரமாய் ஈடுபட்டு வருகிறார்கள். படகுகள் அனைத்தும் தயார் செய்யும் பணியில் ஒரு சில மீனவர்கள் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பாலான மீனவர்கள் செல்ல தயாராகினாலும் சிலர் இன்னும் தயாராகவில்லை.

கடலுக்கு சென்றால் சரியாக மீன் கிடப்பதில்லை, இதனால் நஷ்டம் தான் ஏற்படுகிறது. எனவே அரசு மானிய விலையில் கொடுக்கும் டீசலை உயர்த்த வேண்டும் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தையும் அதிகப்படுத்த வேண்டும், என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

அதே சமயத்தில் ஆழ்கடல் செல்லும் மீனவர்கள் படகுகளில் இஸ்ரோ தொழில்நுட்பத்தில் டிரான்ஸ்பான்டர் என்ற அதிநவீன தொழில்நுட்ப கருவி தற்போது பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடலில் எவ்வளவு தூரம் சென்றாலும் இந்த கருவி மூலமாக மீன்பிடி படகுகளுக்கு தகவல் கொடுக்கலாம். இதனால் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப முடியும். ஒக்கி புயல் சமயத்தில் மீனவர்களுக்கு சரியான தகவல் கிடைக்காத போன காரணத்தினால் பல படகுகள் கரைத்திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அது போல் இல்லாமல் பேரிடர்கள் குறித்து உடனடியாக மீன்பிடி படகுகளுக்கு தகவல் கொடுக்க இஸ்ரோ தொழில்நுட்பத்தில் டிரான்ஸ்பான்டர் என்ற அதிநவீன தகவல் கொடுக்கும் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.