பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், சித்தரிக்கப்பட்ட புகைப்படம் pt web
தமிழ்நாடு

“3 வருசம் உள்ள தள்ளிடுவேன்” பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோரை மிரட்டிய இன்ஸ்பெக்டர்?

PT WEB

செய்தியாளர்: பால வெற்றிவேல்

தரக்குறைவாக நடத்தப்பட்ட பெற்றோர்?

சென்னையில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி அந்த தாய், வேலை முடித்து வீடு திரும்பியபோது, ஆறாவது படிக்கும் தனது மகள் வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார். உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சிறுமியை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு கூறியுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கடந்த 7 நாட்களாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

மருத்துவமனை தரப்பில் அளித்த தகவலின்பேரில், மருத்துவமனைக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திலிருந்து காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தினர். குழந்தையிடம் கேட்டபோது, தண்ணீர் கேன் போடவந்த சதீஷ் என்ற நபரை குறிப்பிட்டுள்ளார். பின்னர், காவல் ஆய்வாளர், சிறுமியின் தாயிடம் ஆதார் மற்றும் பிற ஆவணங்களை காவல்நிலையத்துக்கு கொண்டுவருமாறு கூறியுள்ளதாக தெரிகிறது.

அதன்பேரில் பெற்றோர் காவல் நிலையம் சென்றபோது, காவல்நிலையத்தில் புகாருக்கு ஆளான நபரை மரியாதையாகவும் தங்களை தரக்குறைவாக நடத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

“நீ ரொம்ப திமிரு பண்ற”

சிறுமியின் தாய் இதுதொடர்பாக கூறுகையில், “இன்ஸ்பெக்டர் என் கையை முறுக்கி ‘சொல் சொல்’ என அடித்தார். அதற்கு நான் அவரிடம், ‘எனக்கு என்ன தெரியும்? மருத்துவமனைக்கு சென்றோம்; மருத்துவர்தான் விஷயத்தை எங்களுக்கே சொன்னார். என்னை என்ன சொல்ல சொல்ல சொல்கிறீர்கள்?’ என கேட்டேன். உடனே அவர் வெளியே வந்து என்னை மிரட்டினார். மேலும் ‘நீ ரொம்ப திமிரு பண்ற. பிள்ளைங்கள நல்லா வளக்காத தாய் நீ’ என சொல்லி, ‘இன்னொரு கேஸ் போட்டு 3 வருசம் உள்ள தள்ளிடுவேன்’ என்றார்” என கூறியுள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முடிவுகள் வெளிவந்தபிறகே உண்மை குற்றவாளி யார் எனத் தெரியவரும். முடிவுகள் இன்னமும் முழுமையாக வெளியாகாத நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் தற்போதைக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்சோ வழக்கு என்பதால் விபரங்களை கூற இயலாது

இதுகுறித்து விவரங்களைச் சேகரிக்க அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு நாம் சென்றபோது, ஆய்வாளர் இல்லை என்கிற பதிலும் விசாரணைக்காக அவர் வெளியில் சென்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்வதற்காக காவல் ஆய்வாளரிடம் நாமே தொலைபேசியில் பேசினோம்.

அண்ணாநகர் அனைத்து காவல்நிலைய ஆய்வாளர் ராஜீவிடம் கேட்டபோது, “புகார் அளிக்க வந்த பெற்றோரிடம் எந்த விதமான அத்துமீறலிலும் நாங்கள் ஈடுபடவில்லை” என தெரிவித்தார். மேலும், “மகளிர் காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தால் நாங்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளோமா இல்லையா என்பது முழுமையாக தெரியும். மேலும், இது போக்சோ வழக்கு என்பதால் விசாரணை விவரங்களை வெளியில் தெரிவிக்க முடியாது. தடயவியல் அறிக்கை தயாரானதும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.