தமிழ்நாடு

சேலம்: 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி

சேலம்: 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி

PT WEB

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில், 12-ஆம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் காலக் கல்வெட்டை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவி கண்டுபிடித்துள்ளார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் தொழில்துறையில், முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி இந்துஷா சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கேட்பாரற்ற நிலையில், கல்வெட்டு ஒன்று கிடப்பது குறித்து அறிந்தார். துறைத்தலைவர் செல்வகுமாரிடம் ஆலோசனை பெற்று அந்த கல்வெட்டை ஆய்வு செய்தார்.

80 சென்டி மீட்டர் உயரமும், 29.4 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட கல்வெட்டு, சோழ மன்னர், இரண்டாம் ராதிராஜனுடைய 10 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது என்றும், 12 ஆம் நுாற்றாண்டை சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது.

"நிகரிலிச் சோழ மண்டலத்து கங்கனாட்டு தகட நாடான பொந்னார் கூடலிலிருக்கும் திருவரங்கமுடையான் மகந் சொக்கனாந கற்கடராயப் பல்லவரையன்" என்ற எழுத்துகள் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. ஒரு ஏரியை தர்மமாக வெட்டி, மகாதேவர் கோயிலுக்கு நிலக் கொடையாக அளித்ததையும் கல்வெட்டு குறிக்கிறது. மேலும் நிலத்தின் அளவு கண்டக விதை, குளக விதை என்ற அளவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.