உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஹேப்பி சாலையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் நடனமாடினார்.
மலை மாவட்டமான நீலகிரியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இன்னும் 2 மாதங்களில் கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில் சுற்றுலா நகரமான உதகைக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிய உள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக அதிகம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்கசன் வரையுள்ள வர்த்தக சாலையில் மாதந்தோறும் சனிக்கிழமைகளில் ஹேப்பி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அன்று ஒருநாள் மட்டும் எவ்வித வாகனங்களும் அந்தச் சாலையில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹேப்பி சாலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் விளையாடி மகிழ பாண்டி, சதுரங்க விளையாட்டு, கேரம், பல்லாங்குழியாட்டம், வாலி பால் போன்ற விளையாட்டுகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.
இதனிடையே இந்த ஹேப்பி சாலையானது வர்த்தக சாலை என்பதால் அப்பகுதியில் வர்த்தக கடை உரிமையாளர்கள், உணவகங்கள், வியாபாரிகள் போன்றவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் ஆம்புல்ன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் யாருக்கும் இடையூறு ஏற்படாமல் இருக்க அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் இந்த ஹேப்பி சாலையாக மாற்ற வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.