பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது என்றும், அதிலும் தமிழகத்தில் பணவீக்கம் 5 சதவீதம் அளவில் உள்ளதே பெரும் வெற்றி என்றும் தெரிவித்துள்ளார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உற்பத்தி குறைந்து, தேவை அதிகரித்தால் விலை அதிகரிக்கும். விலை உயர்ந்து, வாங்கும் சக்தி குறையும் போது பணவீக்கம் ஏற்படும். பணவீக்கம் என்பது கடினமானது. கொரேனா பரவல் காரணமாக நூற்றாண்டுகள் காணாத பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. உற்பத்தி கடுமையாக சரிந்தது. கொரோனா முடிந்து சூழல் திரும்பிய பின்னர் பொருட்கள் விநியோக சங்கிலி பாதித்தது. இதன் காரணமாகவே உலகளவில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்கள் கடன்வாங்கும் அளவு எவ்வளவு என நிர்ணயித்து கடிதத்தை அனுப்பியுள்ளது மத்திய அரசு. 2022-23ம் ஆண்டு தமிழக அரசு 83,955 கோடி ரூபாய் தான் கடன் எடுக்க வேண்டும் என கூறி உள்ளது. பொது விநியோக திட்டங்கள் செயல்படுத்தவும், செலவு செய்யவும் கடன் வாங்க வேண்டிய அவசியமுள்ளது. நாங்கள் எவ்வளவு கடன் வாங்க வேண்டும், என்ன திட்டம் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கட்டளையிடுவது எப்படி சரியாகும்? இது பொது விநியோக திட்டத்தை பாதிக்கக்கூடும். பொது விநியோகத்துறைக்கு செலவை நாங்கள் அதிகரித்துள்ளோம்.
சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த ஆண்டு பொது விநியோக திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. மக்களின் தேவைக்கேற்ப தான் பொது விநியோக திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டளைகளை அப்படியே ஏற்றால், டெல்லி சென்று ஒன்றிய அரசிடம் சென்று கையேந்தும் நிலை வந்துவிடும்.
முதலமைச்சர் வழங்கியுள்ள சுதந்திரம் காரணமாக முடிந்தவரை திட்டமிட்டு நிதித்துறை சீரமைக்கப்படுகிறது. அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பினால் எதிர்பார்த்ததைவிட வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை மற்றும் கடன் வட்டி தொகை குறைந்து வருகிறது. ஒரே ஆண்டில் இது சாத்தியமாகி இருக்கிறது. ஒரே ஆண்டியில் 4.61 யில் இருந்து 3.25 ஆக குறைத்துள்ளோம்.
பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை பாதிக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி வருமானம் 37% உயர்ந்துள்ளது. நேர்முக வரியில் அதிக வருமானம் இம்முறையும் வரவில்லை. இதனால் தான் பணக்காரர்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம்.
திமுக ஆட்சியிலும் அதன் பின்னர் ஜெயலலிதா இருந்த வரையில் கூட தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை சீராக தான் இருந்தது. அவர் மறைவுக்குப் பின்னர் நிதிமேலாண்மையிலும் பிரச்சினை தான். தமிழகத்தில் 2014-19ம் ஆண்டில் நிதிமேலாண்மை சிறப்பாக இல்லை. அதன்பின் கொரோனா மேலும் பாதிப்படைய செய்தது. எப்படி அரசாங்கம் நடத்தினார்கள் என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. தற்போது பழைய நிலை சீர் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் சிறப்பான நிதிநிலை வரும் ஆண்டுகளில் கொண்டுவரப்படும். பணவீக்கம் மற்ற மாநிலங்களுக்கு 7சதவீதம் மேல் உள்ள போது, தமிழ்நாட்டிற்கு 5 சதவீதம் அளவில் உள்ளது. இதுவே பெரும் வெற்றி. தேவையில்லாத செலவுகளை குறைத்து தேவையானதற்கு மட்டும் செலவிட்டதால் இது சாத்தியமாகியுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தமிழநாட்டின் நிலை தெளிவாக புரியும்.
தமிழகம் மட்டும் அல்ல அனைத்து மாநிலங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளாகவே டாஸ்மாக் வருவாய் குறைந்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.