எண்ணூர் மக்கள் PT
தமிழ்நாடு

“உடம்பெல்லாம் அரிக்குது, தோல் உரியுது”-வெள்ளத்தில் கலந்த தொழிற்சாலைக் கழிவுகள்; எண்ணூர் மக்கள் அவதி!

எண்ணூர் கழிமுகத்தில் கொட்டப்பட்டுள்ள தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள்

PT WEB

சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிமெட் நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கலந்த மழைநீர் வெளியேற்றப்பட்டதால், கண்ணெரிச்சல், அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக எண்ணூர் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கழிவு நீர் குறித்து மக்கள் கூறியது, “அரசுத் தரப்பில் இருந்து போதிய உதவி கிடைக்கவில்லை. கண் எரிச்சல், உடலில் அரிப்பு, மூக்கில் தோல் உரிவது உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சூழலியல் பொறியாளரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவருமான பிரபாகரன் வீரஅரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த மூன்று நாட்களாக எண்ணூர் கழிமுகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் அதிக அளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. இது எதேர்ச்சியாக நடந்த விபத்தாக தெரியவில்லை, ஒவ்வொரு முறை மழை வெள்ளத்தின் போதும் கழிவுகளை மழை நீரில் திறந்து விடுவதை இந்நிறுவனங்கள் வாடிக்கையாக வைத்துள்ளன.

இந்த பிரச்சனை எண்ணூருக்கு புதிதல்ல, தமிழ் நாட்டிற்கும் புதிதல்ல. தமிழ்நாட்டின் கடலூர், தூத்துக்குடி, வேலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மற்ற தொழிற்சாலை பகுதிகளிலும் இந்த விதிமீறல் தொடர்ச்சியாக, இதே போல மழை காலங்களில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெள்ள நீர் வடியாமல் வீட்டிற்குள் புகுந்து அவதிபட்டுக்கொண்டிருக்கும் எண்ணூர் பகுதி மக்களின் வீட்டிற்குள் தற்போது தொழிற்சாலை கழிவுகள் புகுந்து இருப்பது மேலும் பாதிப்பை அதிகரித்துள்ளது. இது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறியிருக்கும் அபாயகரமான நச்சு எண்ணெய் என்பதால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அரசு விரைந்து அப்புறப்படுத்த வேண்டும்.

விதிமீறல்களில் ஈடுபட்ட தொழிற்சாலைகளை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்பட்ட இழப்புகளுக்கு சமந்தப்பட்ட தொழிற்சாலைகள் தான் காரணம் என்ற அடிப்படையில் அவர்களின் செலவில், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக சர்வதேச தரத்தில் சுத்தம் செய்து தர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை சமந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து அரசு உடனடியாக பெற்று தர வேண்டும்.

உழைக்கும் மக்கள் அதிகமாக வசிக்கும் எண்ணூர் பகுதியில் நடக்கும் இது போன்ற விதி மீறல்கள் மிக பெரிய சூழலியல் மற்றும் சமூக அநீதி. சமூக நீதி அடிப்படையில் ஆட்சி செய்வதாக கூறும் தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.