தமிழ்நாடு

தமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை - வேதனைப்பட்ட இந்திரா பானர்ஜி

தமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை - வேதனைப்பட்ட இந்திரா பானர்ஜி

webteam

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் வருந்தத்தக்க வகையில் உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். திருச்சி நவலுர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.  பாலின சமத்துவத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசும்போது, "நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது, பெண்கள் முன்னேற்றத்திற்கான பல அம்சங்களை கொண்டுள்ளது. அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களோடு, பெண்களை சமுதாயத்தில் முன்னேற்றி விடுவதற்கான பல அம்சங்களை கொண்டுள்ளது. சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து வெளியாகும் செய்திகள் வருந்தத்தக்க வகையில் உள்ளது என்றார். 

மேலும் “தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் மொத்தம் உள்ள 62 நீதிபதிகளில் 12 பேர் பெண்களாக கடந்த ஆண்டு இருந்து வந்தனர். நான் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது, இந்த சிறப்பு நிலவியது. ஆனால் இதுவும் கூட ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும். இந்திய நீதித்துறையின் உயர் பதவியில்  பெண்கள் அதிகளவில் வரவேண்டும். இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 3 பெண்கள் நீதிபதிகளாக பதவி ஏற்றது இதுவே முதல்முறையாக உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய இந்திரா “நாட்டில் இயற்கை வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதால் வெள்ளம் போன்ற இயங்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இவை நீடித்த வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இவற்றை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.  பாலின சமநிலை நிலவும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் வருந்தத்தக்க வகையில் உள்ளது என வேதனை தெரிவித்தார்.