மருதகாசி Twitter
தமிழ்நாடு

“வாராய் நீ வாராய்..” பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளால் ‘பாட்டுக் கோட்டை’ கட்டிய மருதகாசி நினைவுநாள்!

இன்றைக்கு கதைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமலும் பொருத்தமில்லாமலும் மவுசுக்காகவும் விலைக்காகவும் பாடல் எழுதும் உலகில், கலைக்காக அன்றே தமிழ் மரபுக்காகவும் தரத்துக்காகவும் பாடல் எழுதியவர் மருதகாசி.

Prakash J

முத்தான பாடல்கள் மூலம் முத்திரை பதித்த மருதகாசி

தமிழ்த் திரையுலகில் தன் பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளால், ‘பாட்டுக் கோட்டை’ கட்டியவர்கள் பலருண்டு. அவர்களில் கவிஞர்கள் கண்ணதாசன், கல்யாணசுந்தரத்துக்கு முன்பே, முத்தான பாடல்கள் மூலம் முத்திரை பதித்தவர் மருதகாசி. அவருடைய நினைவு நாள் இன்று (நவ.29).

இன்றைக்கு கதைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமலும் பொருத்தமில்லாமலும் மவுசுக்காகவும் விலைக்காகவும் பாடல் எழுதும் உலகில், கலைக்காக அன்றே தமிழ் மரபுக்காகவும் தரத்துக்காகவும் பாடல் எழுதியவர் மருதகாசி. அவருடைய பாடல்களில் பழைய பண்பாடுகள் மட்டுமல்ல; புதிய பார்வையும் மேலோங்கி இருந்தது.

மருதகாசி

விவசாயமே ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறது. இதை மையப்படுத்தியே இன்றுவரை எல்லாக் கவிஞர்களும் ஏர்முனையை தன்னுடைய பேனா முனையைக் கொண்டு எழுதிவருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் மருதகாசி, “ஏர் முனைக்கு நேர் எதுவுமே இல்லை” என்ற ஒற்றை வரியில் உலகுக்கு உண்மையை உணர்த்தினார்.

விவசாயத்தின் பெருமையை எடுத்துரைத்த மருதகாசி

மேலும் அவர்,

“மணப்பாறை மாடு கட்டி

மாயவரும் ஏரு பூட்டி

வயல் காட்டை உழுதுபோடு சின்னக்கண்ணு”

- என விவசாயத்தின் பெருமையை எடுத்துரைத்தார். இது இன்றைய இன்ஸ்டா ரீல்ஸ் இளைய தலைமுறை வரை ஃபேமஸ்!

அத்துடன் விவசாயியின் பெருமையை மற்றொரு பாட்டில் உணர்த்தினார்.

“கடவுள் என்னும் முதலாளி...

கண்டெடுத்த தொழிலாளி விவசாயி”

- எனப் பெருமைப்படுத்தினார். தவிர, அறுவடைக்குப் பிறகு மகிழ்ச்சி பிறக்கும் என்கிற அற்புத வழியையும், ‘தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கமே’ என்று பாட்டு மூலம் கூறினார்.

காதல் பாடல்களில் நாட்டியமாடிய வரிகள்

அடுத்து காதல் குறித்து எழுதாத கவிஞர்களே உலகில் இல்லை எனலாம். அந்தளவுக்கு காதலை வேறுவேறு வகையில் சிந்தித்து எழுதக்கூடியவர்கள் நம் கவிஞர்கள். அந்த வகையில் மருதகாசியும், ‘கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவது உண்மை காதலே’ என்றார். மேலும் அவருடைய பல காதல் பாடல்களில் வரிகள் நாட்டியமாடின. “மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே” என்றும் “தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா” என்றும், “உலவுந்தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே” என்றும் பாடினார். காதலியைக்கூட, “வாராய் நீ வாராய்.. போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்” என கண்ணியத்துடன் அழைத்தார். காதல், காதலியை மட்டுமல்ல, காதலின் தோல்வியைக்கூட, ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’ என சோகமாக மாற்றினார்.

தமிழ்த் திரையுலகில் ஏற்றம் கண்ட கவிஞர்

சமூகம், விவசாயம், காதல் என அனைத்திலும் தன்னுடைய கற்பனை விதைகளை விதைத்து அதைக் காற்றில் தவழவிட்ட மருதகாசி, ஒற்றுமை, தத்துவம் குறித்த பாடல்களிலும் தனித்து விளங்கினார். ஒற்றுமை குறித்த அவர் எழுதிய பாடல் ஒன்றில், “ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே... வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே” என்றார். தத்துவம் குறித்து, “மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே” என்றார்.

மருதகாசி

இப்படி, எளிமை, இனிமை ஆகியவற்றின்மூலம் பல பாடல்களைத் தந்த மருதகாசியின் பாடல்கள், இன்றும் பலருக்கு படிப்பிணையாக உள்ளது. எந்தவித பின்னணியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் ஏற்றம் கண்ட கவிஞர் மருதகாசியின் பாடல்கள், இன்றும் எல்லோருடைய காதுகளிலும் இனிமையைத் தந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.