இங்கிலாந்தில் பயிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர், தான் பயிலும் பள்ளியில் திரட்டிய நிதி மூலம் கும்பகோணத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு மிதியடி இயந்திரத்தை வழங்கியுள்ளார்.
கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்ட உமா தனது கணவர் யோசோதன் உடன் இலங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர்களது மகள் சுருதி, கேம்ப்ரிட்ஜில் உள்ள பள்ளியில் கிரேடு 10 பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதலே பல்வேறு தொண்டுகளை செய்யும் பழக்கம் கொண்டுள்ளார். இவரது இந்த பண்பினை கண்டு அவரது பள்ளி சுருதிக்கு நிதி அளித்துள்ளது.
இந்த நிதியை கொண்டு கும்பகோணத்தில் இயங்கும் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு மிதியடி தயாரிக்கும் எந்திரத்தை மாணவி சுருதி வழங்கியுள்ளார். அப்போது பேசிய சுருதி, மிதியடி இயந்திரத்தால் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
புதிய தலைமுறையிடம் பேசிய சுருதியின் தாய் உமா, தான் பிறந்த மண்ணில் செயல்படும் பள்ளிக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைவதாகவும், உள்நாடோ, வெளிநாடோ எங்கு வசித்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் சமூக நல தொண்டாற்றும் மன நிலையை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.