தமிழ்நாடு

சுனாமி கோரத்தாண்டவத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

சுனாமி கோரத்தாண்டவத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

webteam

லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்த சுனாமி ஆழிப்பேரலை தாக்கியதன் 16ஆம் ஆண்டு நினைவுத் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

16 ஆண்டுகள் என்றாலும் மனத்தில் பதற்றத்தை கொடுக்கும் சுனாமி. அன்றாடம் தவழ்ந்து விளையாடும் கடல் ஒருநாள் சீறியதன் கோரம் தான் 2004ம் ஆண்டு டிசம்பர் 26. 2004ம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுப்பிய துயரத்தில் கடலோர மக்கள் இன்றும் உழன்றுகொண்டிருக்கின்றனர். 2004ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் 9.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவை பொருத்தவரையில் தமிழக கடலோர மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டன.

வழக்கமான கடலில் எழும் அலைகளை விட 100 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன. சென்னையில் கடற்கரையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள், மீனவ மக்கள், கடற்கடை வியாபாரிகள் என நூற்றுக்கணக்கான மக்கள் சுருட்டி இழுத்துச் சென்றது ஆழிப்பேரலை. இதேபோல் நாகையிலும் பேரழிவை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி, வேளாங்கண்ணி, கடலூர் என அனைத்து கடலோர மாவட்டங்களிலும் சூறையாடியது சுனாமி. தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கனோர் உயிரிழந்ததோடு, ஏராளமானோர் காணாமல் போயினர்.

சுனாமி ஏற்பட்டு 16 ஆண்டுகள் கடந்துவிட்டப்போதும், நினைக்கும் போதெல்லாம் இன்றளவும் மனத்தில் ஒருவித பதற்றத்தை கொடுக்கிறது. இந்நாளை கருப்பு தினமாக அனுசரிக்கும் மீனவர்கள் கடற்கரைகளில் நின்று சுனாமியால் இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.