தமிழ்நாடு

புகார் சொன்ன உதயநிதி; மறுத்த அமைச்சர்-அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட மருத்துவ கவுன்சில்

புகார் சொன்ன உதயநிதி; மறுத்த அமைச்சர்-அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட மருத்துவ கவுன்சில்

webteam

கொரோனாவுக்கு மருத்துவர்கள் உயிரிழந்தது குறித்த திமுகவின் உதயநிதி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அதிகாரப்பூர்வபட்டியல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் நாடே ஸ்தம்பித்து போய் நிற்கின்றது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் மருத்துவர்களும் விதிவிலக்கல்ல. முன்களப் பணியாளர்களாக நின்று செயல்படும் மருத்துவர்களும் பெரும்பாலான இடங்களில் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர்.

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்திருந்தார். தவறான தகவலை யார் பரப்பினாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்திருந்தார்.

இதையடுத்து உதயநிதி தனது ட்விட்டரில், “கொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர் பலியாவதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். அச்செய்தி பொய்யாக இருக்கவே நானும் விரும்புகிறேன். எனினும் கொரோனா பணியில் உயிர்த்தியாகம் செய்த அரசு-தனியார் மருத்துவர்-செவிலியர் உள்ளிட்ட முன்கள வீரர் விவரங்களை வெளியிட வேண்டும்” என்க்குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 43 மருத்துவர்களின் பெயர்ப் பட்டியலை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகம் - 43
மகாராஷ்டிரா - 23
குஜராத் - 23
பீகார் - 19
மேற்குவங்கம் - 16
கர்நாடகா - 15
ஆந்திரபிரதேசம் - 12
டெல்லி - 12
உத்தரபிரதேசம் - 11
மத்திய பிரதேசம் - 6
தெலங்கானா - 5
ஹரியானா - 3
சட்டீஸ்கர் - 2
அசாம் - 2
ஜம்மு காஷ்மீர் - 1
பாண்டிச்சேரி - 1
ஒடிசா - 1
மேகாலயா - 1