நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாகவுள்ளன. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதி, மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் தொகுதியான திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். புயல் மற்றும் கனமழை தொடர்பான எச்சரிக்கை காரணமாக இந்தத் தொகுதிகளின் இடைத்தேர்தலை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக, சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் அறிவிப்பின்போது இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுதவிர தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்ற நிலையை எடுத்தனர். இதனால் இந்தத் தொகுதிகளுக்கு சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஓ.பி.ராவத், திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், தமிழகத்தின் இடைத்தேர்தல்கள் தொடர்பாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். புயல் காரணமாக தேர்தல் அறிவிப்புகளை வெளியிடாத போது எதிர்க்கட்சிகள் விமர்சித்ததாகவும், ஆனால் தேர்தலை நடத்தியிருந்தால் புயலால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, தமிழகத்தின் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.