செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரத்திலுள்ள தனியார் விடுதியில் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் இன்று நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பெசிய பொது... “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக வேட்பாளர் தோல்வி பெற வேண்டும்.
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு விரோத அரசாக செயல்படுகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த நாட்டில் மட்டும்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாததில் மிகப்பெரிய சதி இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒன்றிய அரசு கொடுங்கோன்மை அரசாக உள்ளது.
குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. போதையில்லா தமிழகத்தை கொண்டு வர பரிபூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்.
எந்த தீவிரவாத செயலும் ஏற்புடையதல்ல. தேசிய புலனாய்வு முகமை சிறுபான்மை மக்கள் மீது மட்டுமே விசாரனை செய்து வருகிறது. மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி அப்பாவிகளை கைது செய்து அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயலை செய்து வருகிறது.
மாநிலங்களின் உரிமைகளில் தலையிடக் கூடிய செயலில்தான் என்ஐஏ செயல் இருப்பதால் அதனை கலைக்கப்பட வேண்டும். இந்திய குடியுரிமை சட்ட திருத்த சட்டத்திற்கான அலுவலகம் தபால் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. அவை அகற்ற பட வேண்டும்” எனக் கூறினார்.