டெல்லி கணேஷ் முகநூல்
தமிழ்நாடு

‘இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்..’ - விமானப்படை சல்யூட்டுடன் டெல்லி கணேஷ் உடல் தகனம்!

மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நெசப்பாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

PT WEB

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் கடந்த சில நாட்களாக வயது மூப்பு தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அவர் காலமானார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 81.

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி கணேஷின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

போலவே நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், செந்தில், சார்லி, மன்சூர் அலிகான் ஆகியோரும் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். திரைப்பட இயக்குநர்கள் எஸ் பி முத்துராமன், வசந்த், விக்ரமன், வெற்றிமாறன், லிங்குசாமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல் தகனம்

1964ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ் பின்னர் திரையுலகில் நுழைந்தார். சுமார் 400 படங்களில் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர்களுடன் பணிபுரிந்த அவர் சின்னத்திரையிலும் முத்திரை பதித்துள்ளார். பல்வேறு மொழி மாற்றப்படங்களுக்கு குரலும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று டெல்லி கணேஷின் உடலுக்கு விமானப்படை சார்பில் தேசிய கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. 10 வருடங்கள் அவர் விமானபப்டையில் பணியாற்றதன் அடிப்படையில் அவரது உடலுக்கு மரியாதை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் இறுதிப் பயணம்!

தொடர்ந்து டெல்லி கணேஷின் உடல், சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.