இந்தியாவின் பெருமை வேற்றுமையில் ஒற்றுமைதான் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு அருகே நெடுவிளையில் தேவாலயம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருந்தார். இதற்கான உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளில் சகிப்புத்தன்மையும் இடம்பெற்றுள்ளது என்றும், எனவே அனைவருடனும் வாழ மனுதாரர் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்தியாவின் பெருமை வேற்றுமையில் ஒற்றுமைதானே தவிர, ஒற்றுமையில் வேற்றுமை அல்ல என்றும், பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களின் நம்பிக்கைகளை காக்கும் உரிமைகளை அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருப்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.
அதே நேரம் தேவாலயம் கட்டுபவர்கள் பிரார்த்தனை நேரத்தின்போது ஒலிபெருக்கியை பயன்படுத்தாமல் பிற மதத்தினருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இவ்வழக்கை முடித்து வைத்தார்.