தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன்  முகநூல்
தமிழ்நாடு

“நிச்சயமாக மழைப்பொழிவு மிகையாக இருக்கும்” - தனியார் வானிலை ஆய்வாளர் சொல்வதென்ன?

நிச்சயமாக மழைப்பொழிவு மிகையாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்ததை அடுத்து, தமிழ்நாட்டிற்கு நேற்று முன்தினம் (நவம்பர் 11) முதல் வரும் நவம்பர் 18-ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

சொன்னதுபோலவே, சென்னையிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தற்போதுவரை விட்டுவிட்டு கனமழை முதல் லேசான மழை வரை பெய்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் என பல உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால், இன்று பல பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையேதான், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைக்கு அப்பால் நிலவுவதன் காரணமாக, அடுத்த நான்கு தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பொதுவாக மிதமான மழையே பெய்யக்கூடும்” என்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்.1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில், பதிவான மழையின் அளவு 256 மி.மீட்டர். இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 259 மி.மீட்டர், இது இயல்பைவிட ஒரு சதவீதம் குறைவு. இந்நிலையில், வரும் நாட்களில் பருவமழை தீவிரமடையக்கூடும் என்ற தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் நமக்கு இன்று தெரிவித்துள்ளார்.

நம்மிடையே கூறுகையில், “நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 5-க்கு இடைப்பட்ட காலத்தில், பருவமழை உச்சநிலையில் இருக்கும். பருவமழை உச்சத்தை அடையும்பட்சத்தில், நிச்சயம் நிலைமை தீவிரமடையக்கூடும். முக்கியமாக, இந்த ஆண்டு நிச்சயமாக மழைப்பொழிவு மிகையாக இருக்கும். நேற்றைய தினம் மட்டுமே மயிலாடுதுறை, சீர்காழியில் 14 செ.மீ (மிக கனமழை), கொள்ளிடம் 13 செ.மீ என்று பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார் அவர்.