ஆளுநர் ரவி twitter
தமிழ்நாடு

சுதந்திர தினவிழா | ”தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” - திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவிப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திர தினத்தன்று அழைத்திருக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.

webteam

செய்தியாளர்: ராஜ்குமார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டுமென ஆளுநர் ஆர்என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்துள்ளன.

Selvaperunthagai

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், ”கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைந்துள்ளது. இதனால், மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுவதாக பதிவிட்டுள்ளார். அந்த வகையில் ஆர்என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அவரது செயல்பாடுகள் இருக்கிறது” என விமர்சித்துள்ளார்.

மேலும், “மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக்கட்டை போடுவாதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு தாமதம் ஏற்படுவதாகவும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் பதவியில் நீடிப்பது அரசமைப்புக்கு எதிரானது” என்றார்.

Governor RN.Ravi

அதேபோல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஆளுநர் இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுக்கு எதிராகவும், சட்டமன்றத்தில் நீட் விலக்கு வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இருப்பதால் புறக்கணிக்கிறோம் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இதே போக்குடன் ஆளுநர் செயல்பாடுகள் இருந்து வருவதால் இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மமக உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர்.