தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பைவிட 2 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதியில் மேற்கு திசை காற்று வலுப்பெற்றுள்ளது என்றும், லட்சத்தீவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இன்றுவரை 138.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருப்பதாகவும், இது இயல்பை விட இரண்டு சென்டிமீட்டர் அதிகம் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் 13 சென்டிமீட்டரும், புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இடங்களில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.