செய்தியாளர்: சே.விவேகானந்தன்
கர்நாடகா தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
நேற்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. தொடர்ந்து இன்று மீண்டும் நீர்வரத்து அதிகரித்து, காலை நிலவரப்படி வினாடிக்கு 18,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 4-வது நாளாக தடை வித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிதரித்திருப்பதாலும், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் காவேரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.