சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் ராமச்சந்திரன் வீட்டில் வருமான வரித்துறையியினர் சோதனை நடத்தினர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன. இதற்கிடையே அதிமுக (அம்மா) ஆதரவாளர் கருணாகரன் பணப்பட்டுவாடா செய்ததாகக் கைது செய்யப்பட்டார். மேலும் சிலர் பணப்பட்டுவாடா செய்வதாக வந்த தகவலை அடுத்து, அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் ராமச்சந்திரன் வீட்ட்ல் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆயுதம் ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் நள்ளிரவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
வீட்டின் கதவில் நோட்டீஸ் ஓட்டி சோதனை நடத்திய அதிகாரிகள், சோதனை முடிந்ததும் நோட்டீஸை அகற்றிவிட்டுச் சென்றனர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தனது வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் இதில் எதிரணி மற்றும் எதிர்க்கட்சிகளின் சதி இருப்பதாகவும் டிடிவி தினகரனின் ஆதரவாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார். அதே நேரத்தில் சோதனையில் ஏதேனும் சிக்கியதா என்பது குறித்து வருமானவரித்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.