தமிழ்நாடு

சென்னையில் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை

சென்னையில் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை

webteam

சென்னை பெரம்பூரில் உள்ள கங்கா குழுமம் உள்ளிட்ட நான்கு கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மார்க், மிலன், படேல் மற்றும் கங்கா குழுமம் உள்ளிட்ட நான்கு ‌கட்டுமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த நான்கு நிறுவனங்களுக்கும் சென்னையில் சொந்தமாக உள்ள 21 இடங்களில் வருமான வரித் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அதேபோல் பிற பகுதிகளில் இருக்கும் 12 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பெரம்பூரில் எஸ் 2 திரையரங்கம் அமைந்திருக்கும் ஸ்பெக்ட்ரம் மால் மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் கங்கா பவுண்டேஷன் அலுவலகத்தில், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்‌. அதன் உரிமையாளர்களான சிட்டிபாபு மற்றும் செந்திலின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இதேபோல் சைதாப்பேட்டையில் இருக்கும் மார்க் குழுமத்தின் இயக்குநர் ராமகிருஷ்ண ரெட்டியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவரது வீடு அருகே உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைக்கும், இன்று நடக்கும் வருமான வரி சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கி‌ன்றனர்.